தவெக அலுவலகத்தின் முன்வாசலில் அஜிதா தர்ணா போராட்டம் - பின்வாசல் வழியே வெளியேறிய புஸ்ஸி ஆனந்த்
தூத்துக்குடியை சேர்ந்த தவெக பெண் நிர்வாகி அஜிதா, மாவட்ட செயலாளர் பதவி கிடைக்காத நிலையில், சென்னை பனையூர் அலுவலகம் முன்பு ஆதரவாளர்களுடன் நின்று கண்ணீருடன் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

தவெக அலுவலகத்தின் முன் வாசலில் அமர்ந்து பெண் நிர்வாகி அஜிதா, தர்ணா போராட்டம் நடத்திவரும் நிலையில் பின் வாசம் வழியே வெளியேறினார் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த். காலை 10 மணி முதல் தவெக அலுவலகத்தின் வெளியே காத்திருந்தும், விஜய் கண்டுகொள்ளாமல் சென்றதாக கூறி, போராட்டத்தில் இறங்கியுள்ளார் அஜிதா. அவரிடம் நிர்மல் குமார் சமாதான பேச்சுவார்த்தை நடத்திய நிலையிலும், அலுவலகம் உள்ளே அஜிதா அனுமதிக்கப்படவில்லை.
தூத்துக்குடி மத்திய மாவட்டத்துக்கு சாமுவேல் என்பவர் தவெக மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சாமுவேலின் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியை சேர்ந்த பெண் நிர்வாகி தன்னுடைய ஆதரவாளர்களுடன் பனையூர் வந்து காலை முதலே விஜய்யை பார்க்க வேண்டுமென அலுவலகம் முன் காத்திருந்தார். ஆனால் அவரை தடுத்து நிறுத்திய பவுன்சர்கள் கலைந்து போகுமாறும் அறிவுறுத்தினர். '2 வருசமா உண்மையா உழைச்சவங்களுக்கு எந்த மதிப்பும் இல்ல. தொகுதிக்குள்ள எந்த வேலையும் செய்யாத செல்வாக்கே இல்லாத ஒரு ஆளுக்கு போஸ்டிங் போட்டா என்ன நியாயம்?' என அஜிதாவின் ஆதரவாளர்கள் முறையிட்டனர்.


