சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு..!!

 
Q Q

நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து “பழையன கழிதலும், புதியன புகுதலும்..” என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். 

தமிழ்நாடு முழுவதும் போகி பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை கொண்டாடினர். மேலும் போகி பண்டிகையை முன்னிட்டு மேளம் அடித்து சிறுவர்கள் உற்சாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பழைய பொருட்களை எரிப்பதன் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு சராசரி அளவில் இருந்து உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

.சென்னையில் காலை 7 மணி நிலவரப்படி, தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் வெளியிட்டுள்ள காற்றின் தரக்குறியீடு அளவின்படி, அதிகபட்சமாக கும்மிடிப்பூண்டியில் 196- ஆகவும், மணலியில் 144-ஆகவும் , கொடுங்கையூரில் 123-ஆகவும், அரும்பாக்கத்தில் 117-ஆகவும், காந்தி நகர் (எண்ணூர்) 114-ஆகவும், பெருங்குடியில் 103 ஆகவும், வேளச்சேரியில் 76-ஆகவும், ராயபுரத்தில் 64-ஆகவும் உள்ளது. [0-50 அளவில் இருந்தால் நல்ல நிலையில் இருப்பதாக அர்த்தம்]. பனியுடன் கலந்த புகை நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

இதனிடையே சென்னையின் பல்வேறு பகுதிகளில் காற்று மாசு காரணமாக புகைமூட்டம் ஏற்பட்டுள்ளநிலையில், 8 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.