‘அதிமுக மீண்டும் மலரும்’ - ஓ.பன்னீர்செல்வம்
திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் நவயுக நாடகத்திற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியாரின் 146வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெரியார் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “தந்தை பெரியார் திராவிட இயக்கத்தின் தலைக் காவிரியாக இருந்து தமிழகத்தில் அனைவருக்கும் சம உரிமை கிடைப்பதற்கு வழிகாட்டியாக இருந்தார். பெரியாரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும். பெரியாரின் சமூக சீர்திருத்த கொள்கைகளை அதிமுகவினர் பின்பற்றி வருகின்றனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தபடி அதிமுக மீண்டும் மலரும். சசிகலா, டிடிவி தினகரன் உள்பட அணிகள் இணையும் காலம் வெகு தொலைவில் இல்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் இந்த நவயுக நாடகத்திற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்.