பதவி ஆசை பிடித்தவர்கள்தான் கட்சியை விட்டுப் போகிறார்கள் - அதிமுக கொறடா அக்ரி.கிருஷ்ணமூர்த்தி..!
திருவண்ணாமலை கலசப்பாக்கம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக சட்டமன்ற கொறடாவுமான அக்ரி.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், "குதிரை பேரம் மூலம் அதிமுக எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்க சிலர் முயற்சி செய்கிறார்கள். ஆனால், தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை யாராலும் வீழ்த்த முடியாது; அழிக்கவும் முடியாது. ஒரு தலைவர் மறைந்தாலும் அந்த இயக்கத்தில் பல தலைவர்கள் உருவாக முடியும். அதிமுக என்பது வலுவான அடித்தளத்துடன் உருவான இயக்கம். பதவி ஆசை கொண்டவர்களும், அதிகாரத்தை எதிர்பார்த்து இயங்குபவர்களும் தான் இன்று கட்சியைவிட்டு வெளியேறுகின்றனர்.
இயக்கத்திற்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய முன்னுரிமை வழங்குவார். சி.விஜயபாஸ்கர் தவறு செய்யமாட்டார் என நாங்கள் எண்ணுகிறோம். சி.வி.சண்முகத்தின் நிலைப்பாடு குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்; அதற்கு தாம் பதில் சொல்ல முடியாது. தனது கட்சியில் உள்ள நிர்வாகிகள் வேறு கட்சியிலிருந்து வரும் நபர்களால் பயப்பட தேவையில்லை. அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
அதிமுகவை அழித்துவிடலாம் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த இயக்கத்தை ஒருபோதும் யாராலும் அழிக்க முடியாது. பிரிந்து சென்றிருந்த லீமா ரோஸ் மீண்டும் அதிமுகவிடம் வந்து மன்னிப்பு கடிதம் அளித்து இணைந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

