“அதிமுகவை டெல்லி தெருக்களில் அடமானம்... விற்பனை அக்ரிமெண்ட் மட்டும் தான் போடப்படவில்லை”- புகழேந்தி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவை சேர்ந்த பெங்களூரு புகழேந்தி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய புகழேந்தி, “அதிமுக என்கிற கட்சியை டெல்லி தெருக்களில் அடமானம் வைத்து விட்டார்களோ என்கிற வகையில் உள்ளது. விற்பனை அக்ரிமெண்ட் மட்டும் தான் போடப்படவில்லை, விரைவில் அதுவும் நடக்கும். அதிமுக அலுவலகம் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளதா என்கிற கேள்வி எழுந்துள்ளது. டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் மும்மொழி கொள்கை, தொகுதி மறுவரை உள்ளிட்ட காரணங்களுக்காக மத்திய அமைச்சர் அமித் ஷா அவர்களை சந்திக்க செல்கிறோம் என சொல்லாமல் மறுத்தது ஏன்? அதிமுக- பாஜக உடன் தான் கூட்டணி என்பது நாடறிந்த உண்மை, உள்துறை அமைச்சரை அப்பாயிண்மெண்ட் வாங்காமல் சந்தித்திருக்க முடியுமா? இரவு நேரத்தில் ரகசியமாக சந்தித்தது ஏன்?
மீண்டும் ஆட்சி அமைப்போம் என்று திமுகவினர் கூறுகிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி தான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என அமித்ஷா டிவிட்டரில் தெரிவிக்கிறார். மீண்டும் எம்ஜிஆர் ஆட்சி என எடப்பாடி கூறாதது ஏன்? மீண்டும் அம்மா ஆட்சி அமைப்போம் என கேபி.முனுசாமி உள்ளிட்ட தலைவர்கள் கூறாமல் இருப்பது ஏன்?அமலாக்கத்துறை வந்துவிடும் என்கிற பயமா?” எனக் கேள்வி எழுப்பினார்.