ஈபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனை!!

 
admk

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்குகிறது. கொரோனா  தடுப்பு நடவடிக்கையாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தை நடத்த தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.  அதன்படி இன்று காலை 9.50 க்கு பேரவைக்கு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை  முதல்வர் முக ஸ்டாலின்,  பேரவைத் தலைவர் அப்பாவு,  துணைத்தலைவர் பிச்சாண்டி,  எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்கின்றனர்.  இதையடுத்து ஆளுநர் 10 மணிக்கு தனது உரையை வாசிக்க தொடங்குவார்.

ravi

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி  பொறுப்பேற்ற பின் நடைபெறும் பேரவை கூட்டம் என்பதால் அவர் முதன்முதலாக தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார். இதையடுத்து பேரவைத் தலைவர் அப்பாவு,  தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடி ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.

eps ops

இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.  2022-ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணியளவில் சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கவுள்ள நிலையில் காலை 9.15 மணியளவில் அதிமுக ஆலோசனை  நடைபெறுகிறது.   சட்டப்பேரவை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது? என்ன மாதிரியான விவாதங்களை முன்னெடுப்பது? ஆளுநர் உரை மீதான நிலைப்பாடு என்ன ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. அத்துடன் இந்த கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள்,  திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட வாக்குறுதிகள்,  நிறைவேற்றப்படாத தேர்தல் வாக்குறுதி,  நீட் தேர்வு ரத்து விவகாரம், பயிர் பாதிப்பு இழப்பீடு , சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகியவை குறித்து எதிர்கட்சிகள் பேச வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.