அதிமுக-வே எங்களின் பலம்..! - விஜய் கட்சி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அமித்ஷா..!
2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் இணைந்து பாஜக தேர்தலை சந்திக்கிறது. அதன்படி வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் ஏற்கனவே பாமக, அமமுக, தமாகா மற்றும் ஐஜேக போன்ற கட்சிகளும் இணைந்திருக்கின்றன.
இந்த மாதிரியான சூழலில் இக்கூட்டணியில் விஜய்யின் தவெக-வையும் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்தன. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அமித்ஷா பேசியுள்ள வீடியோ தற்போது இணைய தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அமித் ஷா, "தவெக உடன் கூட்டணிக்காக நாங்கள் எந்தவொரு பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. இந்த கூட்டணிக்கு நாங்கள் முயற்சிகூட செய்யவில்லை. அவருடன் கூட்டணி வைத்தால் எங்களின் வாக்கு வங்கியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படக் கூடும்" என கூறியிருக்கின்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "அதிமுக உடனான கூட்டணியே எங்களுக்கு பலம் சேர்க்கிறது. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடனான உறவு அவசியம். ஆகையால், பாஜக தமிழகத்தில் அதிமுகவுடன் மிகவும் நெருக்கமாக பணியாற்றி வருகிறது. அத்தோடு, தமிழ்நாட்டில் பல்வேறு சிறிய கட்சிகளுடனும் நாங்கள் இணைந்து செயல்படுகின்றோம்" என்றார்.
மேலும், "ஆளும் திமுக அரசு மீதான எதிர்ப்பலையே தற்போது தமிழகத்தில் வீசுகிறது. இதனை என்னால் உணர முடிகின்றது. எனவே இந்த தேர்தலில் வலுவான பெரும்பான்மையுடன் எங்களின் கூட்டணி ஆட்சி அமைக்கும்" என்று தெரிவித்தார்.

