#BIG NEWS : 404 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன - முதலிடத்தில் அதிமுக.. 2ம் இடத்தில் தவெக!

 
ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ஏடிஆர்) என்ற தன்னார்வ அமைப்பு, இந்தியாவில் தேர்தல் மற்றும் அரசியல் சீர்திருத்தங்களுக்காக பணியாற்றி வருகிறது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் விக்டர் ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, ஜோசப் விக்டர் கூறுகையில், "தமிழக சட்டமன்றத் தேர்தலில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பாளர்களின் பிரமாண பத்திரத்தின் அடிப்படையில் அவர்களின் குற்ற பின்னணி விவரங்களையும், சொத்து விவரங்களையும் ஆய்வு செய்தோம்.
அதன் அடிப்படையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 4,023 வேட்பாள்ரகளில் 722 வேட்பாளர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர். 404 வேட்பாளர்கள் கடுமையான குற்றப் பின்னணி கொண்டவர்களாக உள்ளனர்.
13 பேர் மீது கொலை வழக்கும், 44 வேட்பாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கும், 18 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளும் உள்ளன.
தீவிர குற்ற வழக்கு பின்னணி கொண்ட வேட்பாளர்களின் விவரங்களை கட்சி அடிப்படையில் ஆய்வு செய்தோம். அதில், அதிமுகவில் 60 வேட்பாளர்கள் மீதும், பாட்டாளி மக்கள் கட்சியில் 6 வேட்பாளர்கள் மீதும், பாஜகவில் 9 பேர் மீதும், தமிழக வெற்றி கழகத்தில் 43 பேர் மீதும், திமுகவில் 32 பேர் மீதும், காங்கிரஸ் கட்சியில் 5 பேர் மீதும், தேமுதிகவில் ஒரு வேட்பாளர் மீதும் தீவிர குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 981 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதிக சொத்துகள் உள்ள 3 வேட்பாளர்களில், அதிமுக வேட்பாளரான லீமாரோஸ் மார்டின் ரூ.5,863 கோடி அளவுக்கும், தவெக தலைவர் விஜய் ரூ.648 கோடி அளவுக்கும், தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா ரூ.534 கோடி அளவுக்கும் சொத்துகள் வைத்திருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிய வந்துள்ளது.
2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 13 சதவீத வேட்பாளர்கள் குற்றப் பின்னணி உள்ளவர்களாக இருந்தனர். தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர்களின் விகிதம் 18 ஆக அதிகரித்துள்ளது.
எனவே, கொலை, பாலியல் வன்கொடுமை, கடத்தல் போன்ற கடுமையான குற்றங்களில் தண்டனை பெற்றவர்களை தேர்தலில் போட்டியிட நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்கள் மற்றும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கும் கட்சிகளின் வரி விலக்கை ரத்து செய்ய வேண்டும்" என்று அவர் கேட்டுக் கொண்டார்.