அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு - ஐகோர்ட் இன்று அவசர விசாரனை..

 
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கு -  ஐகோர்ட்  இன்று அவசர விசாரனை..

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

அதிமுகவில் முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா மறைவுக்கு பின்னர்,  பல அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. ஒபிஎஸ் தர்ம யுத்தம், எடப்பாடி முதல்வர், இரட்டை தலைமை,  தலைமைக்குள் சலசலப்பு,  மீண்டும்   ஒற்றை தலைமை விவகாரம்  என  நாள்தோறும் சர்ச்சைகளுக்கு இடமின்றி  சென்று கொண்டிருக்கிறது. இதற்கிடையே   ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டதோடு, இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்கு , பதில் மனு, நிராகரிப்பு, மாறி மாறி சாதகமான தீர்ப்பு , மேல் முறையீடு என சென்று கொண்டிருக்கிறது.  

இந்த நிலையில் அதிமுக  பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் 18-ந்தேதியும் (நேற்று), 19-ந் தேதியும் (இன்று) நடைபெறுகிறது.  அதன்படி முதல் நாளான நேற்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில், எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதில் தேர்தல் ஆணையர்களான  நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம்  வேட்புமனுவை பழனிசாமி வழங்கினார்.   

admk office

 நாளை (திங்கட்கிழமை) வேட்புமனு மீதான  பரிசீலனை நடைபெறும் நிலையில்,  21-ந்தேதி வேட்புமனு திரும்ப பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 26-ந்தேதி காலை 9 மணிக்கு தேர்தல் நடைபெறுகிறது.   இந்த தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து வேறு யாரும்  மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.  ஆகையால்  இன்று மதியம் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதாக  அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு  பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.   ஓபிஎஸ் ஆதரவாளர்களான  எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக  சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “சட்டவிரோதம் அ.தி.மு.க., பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நாங்கள் தொடர்ந்துள்ள வழக்குகள் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, அ.தி.மு.க., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.

admk

ஆனால், அன்று மாலையே அவசர அவசரமாக, பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டவிரோதமாக வெளியிடப்பட்டு உள்ளது. அதிகாரம் இல்லை இது ஐகோர்ட்டை மீறும் செயலாகும். அதுமட்டுமல்ல ஐகோர்ட்டின் கண்ணியத்தை அவமரியாதை செய்யும் நடவடிக்கையாகும். கட்சி விதிகளை திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு அதிகாரம் இருந்தாலும், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவிற்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.

 1.5 கோடி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பதவிக் காலம் 2026-ம் ஆண்டு வரை உள்ளது.   பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளபோது, எந்த காரணமும் இல்லாமல் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.   எனவே, இந்த தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.  இந்த வழக்கை  இன்று உடனே விசாரணைக்கு எடுக்க உத்தரவிட வேண்டும் என்று  கோரப்பட்டது.  இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்க அனுமதி வழங்கினார். அதன்படி, இந்த வழக்கை நீதிபதி கே. குமரேஷ்பாபு இன்று காலை 10 மணிக்கு விசாரிக்க உள்ளார்.