பாஜகவுடனான கூட்டணியால் அதிமுக நிர்வாகி விலகல்

அதிமுக- பாஜகவுடன் கூட்டணி உறுதி செய்ததையடுத்து அதிமுகவில் உள்ள பல இஸ்லாமியர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே களை கட்ட தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக கடந்த 2023-ஆம் ஆண்டு பிரிந்த அதிமுக- பாஜக கூட்டணி தற்போது மீண்டும் ஒன்றிணைந்துள்ளது. அதிமுகவும் பாஜகவும் இணைந்து, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். அதேசமயம் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் 2026 தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் எனவும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அதிமுக நாகை மாவட்டம் தெத்தி ஊராட்சி கிளை செயலாளர் பக்கீர் மைதீன், “சிறுபான்மை சமூகமாகிய இஸ்லாமியர்க்களை பழிவாங்கி கொண்டிருக்கும் ஒன்றிய ப.ஜ.க. வோடு கூட்டணிட அமைத்துள்ள அ.இ.அ.திமுகவில் 53 ஆண்டுகால கழகப் பணியில் இருந்தும் கட்சி எனக்கு வழங்கிய கிளை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் கணத்த இதயத்தோடு இன்றைய தேதியில் இருந்து விலகி கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.