துப்பாக்கியால் சுட்ட அதிமுக நிர்வாகி கைது
குடும்பத்தகராறில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட ஈரோடு மேற்கு மாவட்ட மாணவரணி அதிமுக இணைச் செயலாளர் கோபிநாத்திடம் நம்பியூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோபி அருகே உள்ள ஆண்டவர்மலையை சேர்ந்தவர் சாமியப்பன் மகன் கோபிநாத்(43). இவர் ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி இணைச்செயலாளராக உள்ளார். விவசாயம் செய்து வருகிறார். இவருக்கும் பவானிசாகர் அடுத்துள்ள எரங்காட்டூரை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகள் பிருந்தாவிற்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 10 வயதில் ஹாசினி என்ற மகளும் உள்ளார். கோபிநாத்திற்கு மது பழக்கம் இருந்த நிலையில் அடிக்கடி போதையில் மனைவி பிருந்தாவிடம் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவும் அதே போன்று போதையில் மனைவி பிருந்தாவிடம் தகராறு செய்து உள்ளார். நாள்தோறும் போதையில் தகராறு செய்து வந்ததால் மனமுடைந்த பிருந்தா இது குறித்து தந்தை வேலுச்சாமி மற்றும் தம்பி திணேஸ்குமாரிடம் கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு வேலுச்சாமியும், அவரது மகன் தினேஷ்குமாரும் காரில் மகள் வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது போதையில் இருந்த கோபிநாத், அவர்களிடமும் தகராறு செய்து உள்ளார். அதை வேலுச்சாமியும், தினேஷ்குமாரும் தட்டி கேட்ட போது ஆத்திரமடைந்த கோபிநாத் வீட்டிற்குள் வைத்து இருந்த உரிமம் பெற்ற இரட்டைகுழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். துப்பாக்கியுடன் வந்த கோபிநாத், வானத்தை நோக்கி 3 முறை சுட்டுள்ளார். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வேலுச்சாமியும், திணேஸ்குமாரும் பயத்தில் வீட்டிற்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு நம்பியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இருவரும் வீட்டிற்குள் சென்றதை தொடர்ந்து ஆத்திரமடைந்த கோபிநாத், தினேஷ்குமாரின் காரை அடித்து உடைத்துள்ளார். அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற நம்பியூர் போலீசார், கோபிநாத்தை கைது செய்தும், அவர் வைத்து இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கோபிநாத்தை நம்பியூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


