“ஒரு கிலோ பருப்பு, ஒரு லி எண்ணெய் இலவசம், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு 10% ஆக உயர்வு”- இபிஎஸ்

 
“ஒரு கிலோ பருப்பு, ஒரு லி எண்ணெய் இலவசம், அரசு பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ இட ஒதுக்கீடு 10% ஆக உயர்வு”- இபிஎஸ்

297 அறிவிப்புகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. 


அதன்படி,

1. வரிச் சுமை மற்றும் விலைவாசி ஏற்றத்தை சமாளிக்க, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 10,000/- சிறப்பு உதவித் தொகை : நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில், கடந்த ஐந்தாண்டு காலமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விஷம்போல் ஏறிவிட்டது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், சொத்து வரி, வீட்டு வரி, மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி போன்ற பல வரிகளும் உயர்த்தப்பட்டுவிட்டது. இதனால், மக்களின் அன்றாட குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, மக்களின் இந்தச் சுமையைக் குறைக்கும் வகையில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிறப்பு உதவித் தொகையாக 10,000/- ரூபாய் வழங்கப்படும்.

2. மகளிர் நலன் காக்க ‘குல விளக்கு திட்டம்’ : சமூகத்தில் பொருளாதார சமநிலையை உருவாக்கிட, குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூ. 2,000/- வழங்கப்படும். இத்தொகை குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

3.மகளிரைப் போல, ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம்: நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கெனவே நடைமுறையில் இருக்கும், நகரப் பேருந்துகளில் பயணம் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

4. வீடு இல்லாத குடும்பங்களுக்கு வீடு வழங்கும் ‘அம்மா இல்லம் திட்டம்': “அம்மா இல்லம் திட்டம்” மூலம், கிராமப் புறங்களில் குடியிருப்பதற்கு
வீட்டு மனையும், சொந்த வீடும் இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். அதேபோல், நகரப் பகுதிகளில் சொந்த வீடு இல்லாத ஏழைகளுக்கு, “அம்மா இல்லம் திட்டம்” மூலம் அடுக்குமாடி வீடுகள் கட்டி விலையில்லாமல் வழங்கப்படும். இந்தத் திட்டத்தில், ஒரே குடும்பத்தில் வசிக்கும் பட்டியலின மக்கள், அவர்களுடைய மகன்கள்/மகள்கள் திருமணமாகி தனிக் குடித்தனம் செல்கின்றபோது, அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி, வீடுகள் கட்டித் தரப்படும்.

5. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்: 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கிராமப்புறங்களின் வளர்ச்சிக்கான இத்திட்டம், 150 நாட்கள் வரை வேலைவாய்ப்பு பெறும் வகையில் செயல்முறைபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

6. அம்மா இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டம்: வேலைக்குச் செல்லும் மகளிருக்கு ரூ. 25,000/- மானியத்துடன், 5 லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும்.

7. முதியோர் உள்ளிட்டவர்களுக்கான ஓய்வூதியங்கள் ரூ. 2,000/-மாக உயர்வு: சமூக ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர், விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 1,200/-ல் இருந்து ரூ.2,000/-ஆக உயர்த்தி வழங்கப்படும்.

8. வங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி : மாணவர்கள், பெற்றோர்கள் நலன் காக்கும் பொருட்டு, வங்கிகளில் கல்விக் கடன் பெற்று, வேலைவாய்ப்பு கிடைக்காமல், கடன் தவணையை செலுத்த முடியாமல் உள்ளவர்களின் கல்விக் கடனை தள்ளுபடி செய்யும் வகையில், அத்தொகையை அரசே ஏற்கும்.

9. வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வாழ்வாதார உதவியாக, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் விலையில்லாமல் வழங்கப்படும்.

10. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில், வீரர்கள் காளையை பிடிக்கும்போது அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும்.
* தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டின்போது, காளையை அடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்கள் அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்க நேரிட்டால், அவர்களது குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். அதேபோல், படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 2 லட்சம் வழங்கப்படும்.
* அரசாணை வழங்கப்பட்ட இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை எழுச்சியோடு நடத்துவதற்கு, அரசின் சார்பில் மானியமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகின்ற ஆன்லைன் பதிவு முறை ரத்து செய்யப்படும். ஏற்கெனவே இருந்த பழைய நடைமுறையே (Manual) மீண்டும் பின்பற்றப்படும்.

11. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் ஏனைய சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த மகளிர், சுயதொழில் தொடங்குவதற்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

12. மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

13. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு மாதந்தோறும் 2,000
ரூபாயும்; +2 வரை படித்து வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாயும், உதவித் தொகையாக வழங்கப்படும்.

14. மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் நிவாரண உதவித் தொகை 8,000 ரூபாயில் இருந்து 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

15. ஒவ்வொரு ஆண்டும் தைப் பொங்கல் அன்று வழங்கப்பட்டு வரும் பொங்கல் தொகுப்புடன், 1,000/- ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.

16. கைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 1000 யூனிட்டில் இருந்து 1400 யூனிட்டாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

17. நகரப் பகுதிகளில் நடைபாதை ஓரமாக கடை வைத்திருக்கும் சிறு வியாபாரிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

18. ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தில் பதிவு செய்து, சொந்த ஆட்டோ இல்லாதவர்கள், புதிய ஆட்டோ வாங்குவதற்கு ரூ. 75,000/- மானியமாக வழங்கப்படும்.


19. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு, குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து பெண்களுக்கும் தரமான சேலையும், விலையில்லா ஆண்களுக்கு தரமான வேட்டியும் வழங்கப்படும். 

20. இல்லத்தரசிகளின் பணிச் சுமையை குறைக்க அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குளிர் பதன பெட்டி (Fridge) விலையில்லாமல் வழங்கப்படும்.

21. குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா அரிசியோடு, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும்.

22. பேரறிஞர் அண்ணா அவர்கள் கொள்கைப்படி ‘உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்' என்பதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாரக மந்திரம். இந்தியா ஒரு வலுவான வல்லரசாக விளங்க, மத்திய அரசு வலுவாக இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. அதேசமயம் மாநில அரசுகளும் அதற்கான நிதி, நிர்வாக உரிமைகளுடன் சுதந்திரமாக சுதந்திரமாக செயல்பட வேண்டும். அதற்கேற்ப, மாநில அரசுகளுக்கு உரிய நிதி நிர்வாகப் பகிர்வை மத்திய அரசு வழங்க வேண்டும் என்பது எங்கள் கொள்கை.

23. மாநிலங்களுக்கான உரிமைகளைப் பாதுகாக்க இந்திய அரசியலமைப்புச் சட்ட வரம்புக்கு உட்பட்டு, மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரப் பொறுப்புகளுடன் மாநில அரசுகள் சுதந்திரமாக செயல்படத் தேவையான நிதிப் பகிர்வுகளும், பொறுப்புகளும் மாநில அரசுகளுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. எனவே, மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப, நிதிப் பகிர்வு முறையில் கூடுதல் நிதிப் பகிர்வை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம். 

24. 12-ஆவது நிதி ஆணையத்திற்குப் பிறகு அமைக்கப்பட்ட மத்திய நிதி ஆணையங்கள், தமிழ் நாட்டிற்கான நிதிப் பகிர்வை படிப்படியாகக் குறைத்து வருவதைச் சுட்டிக்காட்டி, வளர்ச்சியடைந்த தமிழ் நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நிதிப் பகிர்வு இருக்க வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தமிழ் நாட்டின் நிதிப் பகிர்வு குறையாமல் பெறுவதை வலியுறுத்துவோம்.

25. தொகுதிகள் மறுசீரமைப்பில் தமிழ் நாட்டிற்கான தற்போதுள்ள விகிதாச்சார பிரதிநிதித்துவம் குறைந்துவிடாமல் இருக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்.

26. கல்வி, மருத்துவம் போன்ற மனிதவள மேம்பாட்டிற்கு உதவும் முக்கிய துறைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் - பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாடு தொடரும். இவற்றை, மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்.