அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது - எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

 
eps

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இதனை விசாரித்த தனி நீதிபதி பொதுக்குழு செல்லாது என்று தீர்ப்பு அளித்தார். இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அ.தி.மு.க. சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டனர்.இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கிய நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகும் பணிகளை எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். 

admk office

இந்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் பின்னர் கூட்டம் தொடங்கியது.  இந்த கூட்டத்துக்கு பிறகு அ.தி.மு.க. சார்பில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.