நிலத்தை அபகரித்த அதிமுக கவுன்சிலரின் கணவர்- தட்டிக் கேட்டவரின் வாய் உடைப்பு

 
 நிலத்தை அபகரித்த அதிமுக கவுன்சிலரின் கணவர்- தட்டிக் கேட்டவரின் வாய் உடைப்பு

ராசிபுரம் அருகே நிலத்தை அபகரித்த அதிமுக கவுன்சிலர் கணவரை தட்டிக் கேட்ட சிவனடியார் வாய் உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அலவாய்ப்பட்டி ஊராட்சியில் வெள்ளை பிள்ளையார் கோயில் பகுதியில் வசிப்பவர் கதிர்வேல் மகன் கண்ணன். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியாக பணியாற்றிவருகிறார். இவர் சிவனடியார் ஆவார்.
 
இந்நிலையில் இவருக்கு சொந்தமான வீடு மற்றும் தறிப்பட்டரைகள் கடந்த 75 ஆண்டுகளுக்கு மேல் இங்கு பூர்வீகமாக உள்ளது. இந்நிலையில் அலவாய்ப்பட்டி ஊராட்சியின் அதிமுக 3-வது வார்டு கவுன்சிலர் நல்லம்மாள் என்பவருடைய கணவர் ரவிச்சந்திரன் என்பவர் அந்த பகுதியில் உள்ள புறம்போக்கு நிலங்களை அதிமுக அரசியல் பிரமுகர்கள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்வதை தொழிலாக கொண்டுள்ளதாகவும்,புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமிப்பு செய்யும் ரவிச்சந்திரன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கண்ணன் என்பவர் வீட்டின் அருகே நிலம் வாங்கிய நிலையில் கண்ணனுக்கு சொந்தமான நிலத்தையும் சேர்த்து இரண்டடி அதிகமாக வீடு கட்டும் பணியை தொடங்கியதாகவும் தெரிகிறது. 

இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த பிரச்சனை சம்பந்தமாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அலவாய்ப்பட்டி ஊராட்சி தலைவர் ராஜா என்பவர் தலைமையில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி நிலத்தை சர்வேயர் வைத்து அளந்த பின்பே வீடு கட்ட வேண்டும் என முறைப்படுத்தப்பட்டது. இதற்கான தொகையையும் வெண்ணந்தூர் ஒன்றிய அலுவலகத்தில் கண்ணன் கட்டியதற்கான ரசீதை வைத்துள்ளார். சர்வேயர் நிலத்தை வந்து இதுவரை அளந்து தராத நிலையில், அதிமுக கவுன்சிலரின் கணவர் அராஜகப் போக்கை கையில் எடுத்து கண்ணன் என்பவரின் நிலத்தை அபகரித்து வீடு கட்ட தொடங்கியுள்ளார்.
 
தன் நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்ட துவங்கிய ரவிச்சந்திரனிடம், ஏன் இப்படி அராஜகம் செய்கிறாய்? என தட்டிக் கேட்ட கண்ணன் கடவுளிடம் முறையிடுகிறேன் என தன் கையில் இருந்த சங்கை ஊதியப்படி சென்ற நிலையில், அதிமுக கவுன்சிலரின் கணவர் ரவிச்சந்திரனும் அவருடைய மகனும் ஈவு இரக்கமின்றி கீழே கிடந்த செங்கலை எடுத்து கண்ணனை சரமாரியாக தாக்கியதில் அவருடைய உதடு மற்றும் பற்கள் சிதைந்து ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து வெண்ணந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.