அசர வைக்கும் அதிமுக வேட்பாளரின் சொத்து மதிப்பு..!

 
1

ஈரோடு தொகுதியில், லோக்சபா தேர்தலில் திமுக சார்பில் பிரகாஷ், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக்குமார், பாஜக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விஜயகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் கார்மேகம் முத்துவேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சியினர்களும் தங்களது தேர்தல் வேலையில் மும்புரமாகி வருகின்றனர். வேட்பாளர் பட்டியல், வேட்பாளர் பெயர் அறிமுகம், வேட்பாளர் மனுத்தாக்கல் என அனைத்து வேலைகளையும் அனைத்து கட்சியினர்களும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், தேர்தலுக்கான  வேட்புமனுத்தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக் குமாரின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இவர் தற்போது மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ள சரஸ்வதியின் மருமகன் ஆவார். தமிழ்நாட்டின் மிகப் பெரிய பணக்கார வேட்பாளர்களில் இவரும் முக்கியமானவராக உருவெடுத்துள்ளார்.  இவரது ரொக்க கையிருப்பே ரூ. 10 லட்சமாகும். இவரது மனைவி கருணாம்பிகை அசோக்குமாரிடம் ரூ. 5 லட்சம் கையிருப்பு உள்ளதாம்.

தன்னிடம் 10 கிலோ தங்கமும், வங்கி கணக்கில் சுமார் ரூ.7 கோடி இருப்பதாகவும் வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார். தனது மனைவி கருணாம்பிகையிடம் 10 கிலோ தங்கமும், இருப்பதாக கூறி உள்ளார். மேலும், மனைவியின் பேரில் ரூ. 47 கோடி ரூபாய் சொத்து உள்ளதாகவும், இருவரது பெயரில் வீடு, நிலம், அலுவலகங்கள், காலி மனைகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் தனது வேட்புமனுவில் கூறியுள்ளார்.

கோவை, திண்டுக்கல், ஈரோடு, குமாரபாளையம், காங்கயம், சோழங்கபாளையம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் சொத்துக்கள் இருப்பதாகவும் ஆற்றல் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இத்தனை இருப்பதாக கூறியுள்ள அசோக் குமார், தனது பெயரிலோ அல்லது மனைவி பெயரிலோ எந்த வாகனமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

யார் இந்த ஆற்றல் அசோக்குமார்?

ஆற்றல் என்பது அசோக்குமார் தொடங்கிய அறக்கட்டளையின் பெயராகும். இதனால்தான் அவருக்கு ஆற்றல் அசோக்குமார் என்ற பெயர் வந்தது. ஆற்றல் அசோக்குமார் யார் என்பது குறித்து அவரது அறக்கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்:

ஆற்றல் அசோக் குமார் கடந்த 15 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட பள்ளிகள் (TIPS – The Indian Public School) மற்றும் கல்லூரிகளை நமது நாட்டிலும்,வெளிநாட்டிலும் நிறுவி நிர்வகித்து வருகிறார். அசோக்கின் முயற்சிகள் விருதுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, அவை: TIMES குழுவின் சிறந்த சர்வதேச பள்ளி விருதுகள் 2017, 2018, 2019, 2020, 2021; கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தால் 2020 ஆம் ஆண்டின் Edupreneur விருது. புது தில்லி: கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தால் 2021 ஆம் ஆண்டின் Visionary Leader விருது, புது தில்லி: சாதனையாளர் மன்றத்தால் 2021 ஆம் ஆண்டுக்கான இந்திய சாதனையாளர் விருது; 2006 ஆம் ஆண்டுக்கான 44 “சிறந்த ஃபவுண்டரி” க்கான லக்ஷ்மண் ராவ் கிர்லோஸ்கர் விருது, இந்திய இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபவுண்டரி-யால் 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி புது தில்லியில் நடந்த 55 வது இந்திய ஃபவுண்டரி காங்கிரஸில் வழங்கப்பட்டது.

ஆற்றல் அசோக் குமார் 1970 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி பிறந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகாவில் உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் பிறந்தவர். பேராசிரியர் ஆர்.ஆறுமுகம் மற்றும் சௌந்தரம்.கே.எஸ் அவர்களின் மகன். இவரது தந்தை அரசு கலைக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்ற கணிதப் பேராசிரியர் மற்றும் தாய் கொங்குநாடு கலைக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து பின்னர் திருச்செங்கோடு தொகுதியின் (இன்றைய ஈரோடு தொகுதி) பாராளுமன்ற உறுப்பினராக 1991- இல் பதவி வகித்தவர்.

ஆற்றல் அசோக், கருணாம்பிகா குமாரை மணந்தார். இவர் மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ டாக்டர் சி. சரஸ்வதியின் மகள் ஆவார். வர்களுக்கு இரண்டு மகன்கள் (அஷ்வின் குமார் மற்றும் நிதின் குமார்). 

மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷன், இன்டெல் கார்ப்பரேஷன், ஜெராக்ஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட நிறுவனங்களில் அசோக்குமார் பணியாற்றியுள்ளார்.  அசோக்குமார், அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தார். பின்னர் கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் 1987-1991 வருடத்தில் மின் பொறியியல் (B.E) பயின்று பட்டம் பெற்றார். ஆற்றல் அசோக்குமார் அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழகத்திலிருந்து முதுகலை மின் மற்றும் கணினி பொறியியல் (M.S.) பட்டம் பெற்றார் . அமெரிக்காவின் இந்தியானா மாகாணத்தில் உள்ள இண்டியானாபோலிஸ் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (M.B.A.) பெற்றார் 

2021ம் ஆண்டு ஆற்றல் அறக்கட்டளையைத் தொடங்கிநார்.  கடந்த ஆண்டு முதல் ஆற்றல் அறக்கட்டளை ஈரோடு, நாமக்கல், திருச்சி, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கிருஷ்ணகிரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அத்தியாவசிய உள்கட்டமைப்பு மற்றும் பிற தகவல்களைச் சேகரித்து அவற்றின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற சமூகத்துடன் கைகோர்த்துச் செயல்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.