தந்தை பெரியாரின் 145-ஆவது பிறந்த நாள் - அதிமுக சார்பில் மரியாதை!

 
admk office

தந்தை பெரியாரின் 145-ஆவது பிறந்த நாளையொட்டி வருகிற 17ம் தேதி அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 145-ஆவது பிறந்த நாளான 17.9.2023 - ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணியளவில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருஉருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்.

சென்னையில், காலை 10 மணியளவில், அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருஉருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது திருஉருவப் படத்திற்கு, ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். அதே போல், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் இதர மாவட்டங்களிலும், கழக அமைப்புகள் செயல்பட்டு வரும் பிற மாநிலங்களிலும், ஆங்காங்கே உள்ள தந்தை பெரியார் அவர்களுடைய திருஉருவச் சிலைகளுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும்; பிற மாநிலங்களில், மாநிலக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார்கள். 


தந்தை பெரியார் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகளில், மேற்கண்ட சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், அனைத்து நிலைகளிலும் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.