திமுக அரசை கண்டித்து திருக்கழுக்குன்றத்தில் இன்று அதிமுக ஆர்ப்பாட்டம்

 
admk office

தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குத் திராணியற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; கழகத்தைச் சேர்ந்த திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் இவற்றிற்குக் காரணமானவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற வன்முறை நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறை எடுக்க வலியுறுத்தியும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் வாழும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைவரும், அனைத்து வகைகளிலும் இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு, 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் அம்மா அவர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்த மாபெரும் மக்கள் இயக்கமான 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம் இருபெரும் தலைவர்களின் பூரண நல்லாசியோடு மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வருகின்றது. விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடந்த 45 மாத காலமாக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். தமிழ் நாட்டில் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள், ரவுடியிசம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை கட்டுப்படுத்தத் தவறியதன் காரணமாக, ஆங்காங்கே கொலை, கொள்ளை, வழிப்பறி, அராஜகம் மற்றும் போதைப் பொருள் புழக்கம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. 
செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. M. தினேஷ்குமார், இவரது மனைவியும், பேரூராட்சி மன்ற 12-ஆவது வார்டு உறுப்பினருமான திருமதி சுமிதா தினேஷ்குமார் ஆகிய இருவரும், நாள்தோறும் மக்கள் நலப் பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயலாற்றி வருகின்றனர். இப்பகுதியில், கஞ்சா மற்றும் குடிபோதையில் கலாட்டா செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ள வினோத், அப்பு உள்ளிட்ட விஷமிகள், 25.2.2025 அன்று இரவு பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. தினேஷ்குமாரை கடுமையான ஆயுதம் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதைத் தடுக்க முயற்சித்துள்ள திரு. மோகன் என்பவரையும் கடுமையாகத் தாக்கி உள்ளனர். இவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தகைய வன்முறை நிகழ்வுகளைப் பார்க்கும்போது, தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றி வந்த, திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. தினேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி, தக்க தண்டனையை பெற்றுத் தர வேண்டும் என்று விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் திரு. தினேஷ்குமார், திரு. மோகன் ஆகியோர், விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 
இந்நிலையில், தமிழ் நாட்டில் நடைபெற்று வரும் பல்வேறு குற்றச் செயல்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குவதற்குத் திராணியற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் திரு. தினேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் இவற்றிற்குக் காரணமான அனைவர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 27.2.2025 வியாழக் கிழமை காலை 10 மணியளவில், 'திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகில்' மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். 
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. D. ஜெயக்குமார் அவர்கள் தலைமையிலும்; செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. திருக்கழுக்குன்றம் S. ஆறுமுகம் அவர்கள் முன்னிலையிலும் நடைபெறும். 
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், கழக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள், இந்நாள் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட கழக உடன்பிறப்புகள் அனைவரும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மகளிர், வியாபாரிகள் மற்றும் பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.