அதிமுக 120வது வட்டச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் மூர்த்தி அதிரடி நீக்கம்!

அதிமுக 120வது வட்டச் செயலாளர் ஐஸ்ஹவுஸ் மூர்த்தி என்பவர் மாமூல் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்காததால் இரண்டு பேரை கடைக்கு அனுப்பி சாப்பிட்டு விட்டு பணம் தராமல் அந்த கடையின் உரிமையாளர் அப்துல் ரகுமானிடம் தகராறு செய்துள்ளனர். இதுதொடர்பாக கடை உரிமையாளர் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஐஸ்ஹவுஸ் மூர்த்தி அதிமுகவின் அடிப்படிடை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்: அதிமுகவின் கொள்ளை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும் கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளார்.
அதாவது தென் சென்னை வடக்கு(கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்ஹவுஸ் மூர்த்தி (120 தெற்கு வட்டக் கழக செயலாளர் திருவல்லிக்கேணி கிழக்கு பகுதி) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.