AI மூலம் கொடிய நோய்க்கிருமிகளை உருவாக்க வாய்ப்பு.. பில் கேட்ஸ் எச்சரிக்கை..!

 
1

AI வளர்ச்சியால் கோவிட்-19 தொற்றை விடப் பேராபத்து ஏற்படும்: பில் கேட்ஸ் பகீர் எச்சரிக்கை!

அரசாங்களால் பாதுகாப்பு விதிமுறைகளை வகுக்க முடியாத அளவுக்குச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். ஃபைனான்சியல் டைம்ஸ் (Financial Times) நடத்திய AI உச்சி மாநாட்டில் பேசிய அவர், தொழில்நுட்பத்தின் நன்மைகளை விட அதன் ஆபத்துகளே தற்போதைய சூழலில் அதிகக் கவனம் செலுத்தப்பட வேண்டியவை என்றார். திறந்தவெளி AI மாடல்களில் பாதுகாப்பு அம்சங்களை நீக்குவது மற்றும் முறையான கட்டுப்பாடுகள் இல்லாதது போன்ற காரணங்களால் ஆபத்தான நபர்கள் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது முக்கியமான கட்டமைப்புகளை முடக்கவோ வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

கோவிட்-19 தொற்றை விட மோசமான நிலை:

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் உயிரியல் தாக்குதல்கள் கோவிட்-19 பெருந்தொற்றை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார். உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகளின்படி, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உலகளவில் சுமார் 1.5 கோடி பேர் உயிரிழந்தனர். அதைக் காட்டிலும் AI மூலம் உருவாக்கப்படும் நச்சு ஆபத்துகள் மனிதகுலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று அவர் தெரிவித்தார். மேலும், முன்னணி AI நிறுவனமான 'ஆந்த்ரோபிக்' (Anthropic) தனது ஐபிஓ (IPO) அறிக்கையிலேயே இது போன்ற மனிதகுலத்திற்கே அச்சுறுத்தலான பேரழிவுகள் குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பதை அவர் பாராட்டியுள்ளார்.

அரசாங்கத்தின் தலையீடும், டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாடும்:

AI துறையில் நிறுவனங்களே தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கைக்கு பில் கேட்ஸ் எதிர்ப்பு தெரிவித்தார். சந்தைப் போட்டியில் நிறுவனங்கள் தாங்களே விதிகளை வகுத்துக்கொள்வது பலனளிக்காது என்றும், பொதுவான தரநிலைகளை உருவாக்க அரசாங்கத்தின் நேரடி தலையீடு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அமெரிக்கா சர்வதேச அளவில் AI கட்டுப்பாட்டு முயற்சிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், சுயாதீன தணிக்கை முறைகள் மற்றும் உயிரியல் கண்காணிப்பை (Biological Surveillance) அரசாங்கங்கள் பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

நன்மைகளும் பொருளாதார மாற்றங்களும்:

அதேவேளையில், பாதுகாப்புக் காரணங்களுக்காக AI தொழில்நுட்பத்தின் நன்மைகளைத் தடுத்துவிடக் கூடாது என்றும் பில் கேட்ஸ் குறிப்பிட்டார். மருத்துத்துறையில் புதிய மருந்துகளைக் கண்டறியவும், மருத்துவமனைப் பணிகளை விரைவுபடுத்தவும் AI பெரிதும் உதவும் என்றார். மேலும், AI தொழில்நுட்பம் பொருளாதாரத்தையும் வேலைவாய்ப்புகளையும் மாற்றி அமைத்து வரும் சூழலில், கோடீஸ்வரர்கள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படுவதை அவர் ஆதரித்ததுடன், OpenAI மற்றும் Anthropic நிறுவனங்களின் நிறுவநர்களுடன் இணைந்து உலகளாவிய சுகாதாரப் பணிகள் குறித்து விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.