"இது தலைமைச் செயலகமா? அல்லது தவெக கட்சியினுடைய தலைமை நிலையமா?"- அக்ரி கிருஷ்ணமூர்த்தி

 
ச்

"இது தலைமைச் செயலகமா? அல்லது தவெக கட்சியினுடைய தலைமை நிலையமா?" என்று எங்களுக்கு புரியவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேட்டியளித்துள்ளார்.

குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் அதிமுக சட்டமன்றக் கட்சிக் கொறடா அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி மனு அளித்தார். பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதை ஊக்குவித்தால் குதிரை பேரம் குதிரை வேகத்தில் நடைபெறும். கட்சி தாவல் தடைச் சட்டம் தொடர்பான புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் கவனமாக பரிசீலிக்க வேண்டும். அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்றது  விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானது.

தங்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாய்ந்து விடும் என்பதால் 3 பேரும் ராஜினாமா செய்துள்ளனர். 3 பேரின் ராஜினாமாவை ஏற்றது சட்டத்திற்கு மாறானது. ராஜினாமா கடிதம் கொடுத்த 5 நிமிடத்தில் தவெக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. ஆட்சியை நிலை நிறுத்த பின்வாசல் வழியாக முதலமைச்சர் முயற்சி செய்கிறார். இது தலைமை செயலகமா? தவெகவின் கட்சி அலுவலகமா? குதிரை பேரத்தை தடுத்து நிறுத்துவதற்கு தவெக அரசு முன்வர வேண்டும். தவெக அரசுக்கு ஆதரவு அளித்துவிட்டு மீண்டும் EPS பக்கம் வந்தவர்கள்  தாங்கள் செய்த தவறை உணர்ந்து மன்னிப்புக் கடிதம் கொடுத்தார்கள்” என்றார்.