ஆக்ரா ரயிலில் துர்நாற்றம்: சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் மீட்பு – அதிர்ச்சியில் பயணிகள்!

 
Q

சென்னையிலிருந்து புதுடெல்லி நோக்கி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில், கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா ரயில் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது ஒரு பொதுப்பெட்டியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசிய நிலையில், அங்கு சந்தேகத்திற்கிடமாக சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது.

சூட்கேஸை திறந்து பார்த்தபோது அதற்குள் அடையாளம் தெரியாத நிலையில் மனித உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆக்ரா போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர். சடலம் தொடர்பான தடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த சூட்கேஸ் சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இவ்வழக்கில் உத்தரப் பிரதேச காவல்துறையினர் தமிழக ரயில்வே போலீசாரின் உதவியை நாடினர். தொடர்ந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 350க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

பல மணி நேரம் நடைபெற்ற தீவிர ஆய்வில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் சிவப்பு நிற சூட்கேஸுடன் வந்த ஒரு ஆணும், பெண்ணும் அதை ஆக்ரா செல்லும் ரயிலில் வைத்துவிட்டு, சென்னை பூங்கா ரயில் நிலையத்திலிருந்து கூடுவாஞ்சேரி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில் பயணித்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டன. அப்போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சூட்கேஸுடன் ரயில் நிலையத்திற்கு வந்தது பதிவாகி இருந்தது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள், மீண்டும் எங்கே போனார்கள் என ஆய்வு செய்தபோது, ரயில் நிலையத்திலிருந்து வெளியேறி ஆட்டோவில் கூடுவாஞ்சேரி மசூதி தெரு பகுதிக்குச் சென்ற காட்சிகளும் போலீசாருக்கு கிடைத்திருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து அந்த ஆட்டோவின் தடத்தைப் பின்தொடர்ந்த போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டை அடையாளம் கண்டு, அங்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால் வீட்டு பூட்டப்பட்டிருந்திருக்கிறது. இதையடுத்து அவர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை மேற்கொண்டனர்.

வீட்டுக்குள் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உள்ளே சென்றதும், அவர்கள் சந்தேகித்தது போலவே அங்கு வைத்து கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. கொலைக்கு பின்னர் உடலை மறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர். குறிப்பாக, உடலை துண்டித்து அதில் எலும்புகளை தனியாகப் பிரித்து சூட்கேஸில் அடைத்து ரயில் மூலம் ஆக்ராவுக்கு அனுப்பியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

மேலும் மீதமிருந்த உடல் பாகங்களை அழித்து தடயங்களை மறைப்பதற்காக பெரிய பாத்திரத்தில் மைதா மாவு மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து சமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், பெண்ணின் தலை இதுவரை கிடைக்காததால், அது தொடர்பாகவும் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினரிடம் நடத்திய விசாரணையில் அந்த வீட்டில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என 3 பேர் தங்கி இருந்துள்ளனர். அவர்களில் ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து மற்றொரு பெண்ணை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்ட பெண், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என்பதும், அவர் தாம்பரம் அருகேயுள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இதற்கிடையே, கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண்ணின் மகன், தாம்பரம் பகுதியில் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருவது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவரை காவல்நிலையத்துக்கு அழைத்துச்சென்ற போலீஸார் அவரது தாயார் தொடர்பான விவரங்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடய நிபுணர்களை வைத்தும் கூடுவாஞ்சேரி போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படும் நிலையில், தலைமறைவாக உள்ளதாக சந்தேகிக்கப்படும் ஒரு ஆண், ஒரு பெண் ஆகிய இருவரை கைது செய்வதற்காக தனிப்படை போலீஸார் பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தற்போது கொலை செய்யப்பட்ட பெண்ணும், கொலை செய்தவர்களுக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருந்ததா? அல்லது நகை, பணத்திற்காக கொலை செய்யப்பட்டாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்