நாளை தொடங்குகிறது ‘அக்னி நட்சத்திரம்’ - வெப்பம் அதிகரிக்கும் என எச்சரிக்கை!!

 
tn

இந்தியாவில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வடமாநிலங்களில் சராசரியாக வெப்பம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. டெல்லி ,பஞ்சாப், அரியானா ,உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . குறிப்பாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலையை இயல்பை விட மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.  அதேசமயம் வடகிழக்கு மற்றும் வெப்ப சலனம் காரணமாக தெற்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

summer

இந்நிலையில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது . ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 21 ம் தேதி முதல் வைகாசி மாதம் 14-ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.  இந்த நாளை அக்னி நட்சத்திரம் என்று கூறுவர்.  இந்த நாட்களில் வழக்கத்தைவிட வெப்பநிலை அதிகமாக இருக்கும்.  பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி மக்களை வாட்டும்.  இன்னும் சில மாவட்டங்களில் 110 டிகிரியை வெப்பநிலை தாண்டும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல் காற்று வீசுவதுடன் இரவு நேரத்தில் புழுக்கம் அதிகரிக்கும்.

tn

கத்திரி வெயில் நாளை தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள்,  குழந்தைகள் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதை தவிர்க்க வேண்டும்.  முடிந்தவரை வீட்டிலேயே இருப்பது நல்லது.  கத்திரி வெயிலின் தாக்கத்திலிருந்து உடல் நலத்தை பாதுகாத்து கொள்வதற்கு அதிக காரம் இல்லாத உணவுகளை சாப்பிடுவதுடன்,  தர்பூசணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உண்ணவேண்டும்.  நுங்கு, இளநீர் , வெள்ளரிக்காய்,  மோர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.