நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம்..!

 
1

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே வெயில் கொளுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தில் இருந்தே வெயில் அதிகமாக காணப்படுகிறது. தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்த தொடங்கிவிட்டது.

 வேலூரில் ஏற்கனவே அதிகபட்சமாக 103.3 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. ஈரோட்டில் நேற்று 103.2 டிகிரியும், திருத்தணியில் 102 டிகிரியாகவும் வெயில் கொளுத்தியது. அதேபோல் திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் வெயில் ஏற்கனவே 100 டிகிரியை தாண்டிவிட்டது. சென்னையிலும் வெயில் அதிகமாக கொளுத்துகிறது.

இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும். அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

பல மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தும். சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியையும் தாண்டிவிடும். இதன் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும். இரவு நேரத்தில் புழுக்கம் அதிகமாக காணப்படும்.

பொதுவாக கோடை வெயிலின் உக்கிரம் இந்த கத்திரி வெயில் கால கட்டத்தில் தான் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் இருந்தே வெயில் அனலாய் கொதிக்கிறது. சேலம், ஈரோடு, கரூர், தர்மபுரி, திருத்தணி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 105 டிகிரி வரை வெப்பம் பதிவாகி வருகிறது. ஊட்டியில் கூட இதுவரை இல்லாத அளவு வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. கோடை மழையும் இந்த ஆண்டு போதிய அளவு பெய்யவில்லை. சென்னையில் ஒரு சொட்டு மழை கூட இப்போது வரை பெய்யவில்லை. தென் மாவட்டங்கள் குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்தது.வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆர்வர்லர்களும் கணித்துள்ளனர். இது மக்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்தாலும், கோடை மழை ஏமாற்றினால் கத்தரி வெயிலின் தாக்கம் வழக்கத்தைவிட மேலும் அதிகரித்து காணப்படும். இதனால் மக்கள் கதி கலங்கியுள்ளனர்.