அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கைது..!
கோவை பெரியார் அறிவுலக நூலகம் உட்பட 6 மாவட்டங்களில் உள்ள நூலகங்களுக்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்தது. இதனையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த வேண்டி பள்ளிக் கல்வித்துறை சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக பொது நூலகத்துறையைச் சேர்ந்த அடையாளம் தெரியாத அரசு அலுவலர்கள் மீது கடந்த 07.11.2026 அன்று விரிவான விசாரணை பதிவு செய்யப்பட்டு, புத்தகக் கொள்முதல் தொடர்பான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
இந்த விசாரணையில் சென்னை மடிப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் ஆர்.மோகன் உட்பட நூலக அலுவலர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, மோகன் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை லஞ்ச ஒழிப்புத்துறை தீவிரப்படுத்தியது.
இதன் தொடர்ச்சியாக இன்று (நவ.16) விசாரணையின் ஒரு பகுதியாக ஒரே நேரத்தில் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் அகல் விளக்கு பதிப்பகம் மற்றும் பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் நிறுவனங்களின் அலுவலகங்கள், அவற்றின் உரிமையாளர் மோகனின் இல்லம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டங்களுக்கான ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களின் மைய நூலகங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
மேலும், அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் நிறுவனங்களின் புத்தகங்கள் அச்சிடப்படும் இடமாகக் குறிப்பிடப்பட்டுள்ள திருவாரூர் மாவட்டம் குடவாசலில் உள்ள அச்சகத்திலும் சோதனை நடைபெற்றது.இந்தச் சோதனைகளின்போது அரசு நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டதற்கான ரசீதுகள், கொள்முதல் தொடர்பான ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட முக்கியப் பொருட்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, இந்த பதிப்பகங்களின் உரிமையாளர் மோகனை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, நூல்கள் கொள்முதல் முறைகேடுகள் தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

