பழனிசாமி கட்சியை தன் சொத்தாக்க முயற்சி- வைத்திலிங்கம்

கொடியை பயன்படுத்த கூடாது என்பது சர்வாதிகார செயல் என முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் சாடியுள்ளார்.
அதிமுக ஓ.பன்னீர்செல்வம் அணியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஈரோட்டில் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜேசிடி பிரபாகர் மற்றும் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைத்தியலிங்கம், “கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. கட்சியின் சட்ட விதிகள் படி ஓபிஎஸ்தான். ஒருங்கிணைப்பாளர் கொடியை பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் சொல்லவில்லை பிரிந்திருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக ஒன்றுபட்டால் தான் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற முடியும். 2026-ல் அம்மா ஆட்சி தலைவர் ஆட்சி கொண்டுவர ஒன்றுபட வேண்டும்.
எடப்பாடி பழனிச்சாமி கட்சியை தன் சொத்தாக்க முயற்சிப்பதாக அங்கிருப்பவர்கள் சிந்திக்க தொடங்கியுள்ளனர். மாவட்ட செயலாளர்கள் நிறைய பேர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஒன்றிணைய வேண்டும் என பெரும்பாலோனார் நினைக்கின்றனர். அந்த தரப்பில் இருந்தும் எங்களிடம் பேசி வருகின்றனர். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கூட்டம் நடத்தலாம். கூட்டம் நடத்த கூடாது கொடியை பயன்படுத்த கூடாது என்பது சர்வாதிகார செயல்” என்றார்.