செங்கோட்டையன் நடவடிக்கையை பார்த்தால் அதிமுகவினர் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பது தெரிகிறது- தங்க தமிழ்ச்செல்வன்

 
தங்க தமிழ்ச்செல்வன்

செங்கோட்டையன் நடவடிக்கையை பார்த்தால் அதிமுகவினர் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.

அந்த ஆடியோவில் பேசியது நான் தான்; கட்சியை விட்டு என்னை நீக்க வேண்டியது  தானே?" - தங்க தமிழ்ச்செல்வன் அதிரடி


தேனி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளருமான தங்க தமிழ்செல்வன் இன்று தேனி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோடை கால குடிநீர் பிரச்சினை குறித்து நடவடிக்கை வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்செல்வன், “கோடை காலம் என்பதால் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தடையின்றி குடிநீர் வழங்க வேண்டும். மின்சாரம் தடையின்றி வழங்க வேண்டும், மேலும் போடி பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு 18 ஆம் கால்வாய் திட்டத்தின் மூலமாக பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளேன். மேலும் குரங்கனி மலை கிராம பகுதியில் கேபிள் மூலமாக பிஎஸ்என்எல் இணைய சேவையை துவங்க நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டுக்குள் துவங்கப்படும் அதற்கான நிலம் பார்க்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்டத்திருத்தத்தை திமுக எதிர்க்கிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தின் மூலம் இஸ்லாமிய மக்களுக்கு ஒரு நல்ல தீர்வை நாங்கள் கொண்டு வருவோம். செங்கோட்டையன் தனியாக டெல்லி செல்கிறார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்திக்கிறார், எடப்பாடி பழனிசாமியுடன் சன்டையிடுகிறார், சட்டமன்றத்தில் அதிமுக வெளிநடப்பு செய்தால் செங்கோட்டையன் விவாதத்தில் பங்கேற்கிறார். இவர்கள் செயல்பாட்டை பார்த்தால் அதிமுகவில் ஒரே நிலைப்பாட்டில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது. திமுக அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்க துறை சோதனை நடத்தப்படுகிறது. இது ஒன்றிய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்பது அனைவருக்கும் தெரிந்ததே இதை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்” என்றார்.