49 ரயில் சேவைகள் திடீர் ரத்து- மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளது: செங்கோட்டையன்
சென்னையின் போக்குவரத்துத் தேவைகளில் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் புறநகர் மின்சார ரயில் சேவையில், போதிய மாற்று ஏற்பாடுகள் கொடுக்காமல் தொடர்ந்து ரயில் சேவையைக் குறைத்து வருவது பொதுமக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செங்கோட்டையன் தனது எக்ஸ் தளத்தில், “சென்னையின் போக்குவரத்துத் தேவைகளில் பிரிக்க முடியாத அங்கமாக இருக்கும் புறநகர் மின்சார ரயில் சேவையில், போதிய மாற்று ஏற்பாடுகள் கொடுக்காமல் தொடர்ந்து ரயில் சேவையைக் குறைத்து வருவது பொதுமக்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எழும்பூர் ரயில்நிலைய பராமரிப்பு பணிக்காக 204 மின்சார ரயில் சேவைகளை 164 ஆகக் குறைப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி கடந்த 4 நாள்களாக ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அப்போதே பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்தநிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 49 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருப்பது சாமானிய மக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.
பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் என்ற பெயரில், லட்சக்கணக்கான பயணிகளின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் இத்தகைய அலட்சிய நடவடிக்கை கண்டனத்துக்குரியது.ஏற்கனவே, சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் நிலையில், ரயில்களை நம்பியிருக்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். மாற்று ஏற்பாடுகளைச் சரியாகத் திட்டமிடாமல், ரயில் நிலையங்களில் மக்களைக் கூட்டமாகத் தவிக்க விடுவது நிர்வாகத்தின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.
தென்னக ரயில்வே நிர்வாகம் இத்தகைய பணிகளை மேற்கொள்ளும் போது, பீக் ஹவர்ஸ் (Peak Hours) எனப்படும் அதிகாலை மற்றும் மாலை நேரங்களைத் தவிர்த்து, மாற்று அட்டவணையை முறையாக வெளியிட்டிருக்க வேண்டும். மேலும், ரத்து செய்யப்பட்ட சேவைகளுக்கு ஈடாகக் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கும் உள்ளது. அரசு இயந்திரங்களின் ஒருங்கிணைப்பு இல்லாததால் இன்று பொதுமக்கள் நடுத்தெருவில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, ரயில்வே துறை உடனடியாக இந்த ரத்து நடவடிக்கையை மறுபரிசீலனை செய்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில்களை இயக்க முன்வர வேண்டும். அதேபோல், தமிழக அரசுப் போக்குவரத்துத் துறை மூலம் பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கி, பொதுமக்களின் சிரமத்தைக் குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

