“கேள்வி கேட்டு மடக்காதீங்க... விஜய் விருப்பப்பட்டால் இதை இனி கண்டிப்பாக செய்வேன்”- செங்கோட்டையன்
ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசாரம் செய்யும், விஜயமங்கலம் அருகே சரளை பகுதியில், இறுதிகட்ட ஏற்பாடுகளை கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “காவல்துறையினர் கூறியதை விட கூடுதலான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விஜயின் வருகை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக இருக்கும். இங்கு யாருக்கும் பாஸ் கிடையாது, பொதுமக்கள் அனைவரும் வருகை தந்து பார்க்கலாம். 20 தண்ணீர் தொட்டிகளும், ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்படும். போதுமான கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5 ட்ரோன் கேமரா மூலமாக காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். 40 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஒரே இடத்தில் இருந்து அனைவரையும் கண்காணிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வருகிறவர்களுக்கு நிவாரண பணிகள் செய்வதற்கு 60 பேருக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது .
14 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 42 மருத்துவர்கள்,72 செவிலியர்கள் பணியாரத்தப்பட உள்ளார்கள். ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள். பத்தாயிரம் தொண்டர்களும் 25 ஆயிரம் பொதுமக்களுக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தை முடித்த பின் அடுத்தடுத்த மாவட்டங்களில் விஜய் பயணம் மேற்கொள்ள உள்ளார். முதலமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியை விட சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்களை நாங்கள் வரவேண்டாம் என சொல்லவில்லை. காவல்துறையினர் வேண்டுகோள் வைத்துள்ளனர். அதிகமான கூட்டம் கூடினால் இந்த இடம் தாங்காது, அதனை கட்டுப்படுத்த முடியாது என்பதால் வேண்டுகோள் வைத்துள்ளோம். வேறு ஒன்றும் இல்லை. எல்லோரும் வரவேண்டும், எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை. ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும், கேள்வி கேட்டு என்னை மடக்குகிறீர்கள்... எதையாவது கேட்டு ஸ்க்ரோல் போட்டு விடாதீர்கள்.. முன்னாள் அமைச்சர்கள் வேறு யாராவது இந்த கூட்டத்தில் தவெக.வில் இணைய வாய்ப்பு உள்ளதா என்பதை பொறுத்திருந்து பாருங்கள். விஜய் விருப்பப்பட்டால் அடுத்தடுத்து நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிகளையும் ஒருங்கிணைத்து தருவேன்” என்றார்.

