“அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து எனக்கு தெரியாது”- விரக்தியின் உச்சத்தில் செங்கோட்டையன்
அதிமுகவில் எல்லாவற்றிக்கும் விரைவில் நன்மை கிடைக்கும், பொறுத்திருந்து பாருங்கள் என, அக்கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை கட்சி பதவிகளில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டார். தொடர்ந்து இரு தரப்பினரும் டெல்லியில் அமித்ஷாவை தனித்தனியக சந்தித்தனர். ஒருங்கிணைப்பு கோரிக்கையில் கெடு முடிந்த பிறகு அந்த பணியை மேற்கொள்ளப் போவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்திருந்த நிலையில், ஒருங்கிணைப்புக்காக அவர் விடுத்த காலக்கெடு கடந்த மாதம் 17ஆம் தேதி உடன் முடிவடைந்தது. எனினும் இதுவரை அடுத்த கட்ட நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளாமல் அது குறித்த எவ்வித தகவல்களையும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறார். கடந்த மாதம் கோபிசெட்டிபாளையம் வழியாக எடப்பாடி பழனிச்சாமி நீலகிரிக்கு சென்ற போதும் அவரை வரவேற்காமல் புறக்கணித்தார்.
ஒருங்கிணைப்பு கோரிக்கைக்காக எடப்பாடி பழனிச்சாமி உடன் கே.ஏ.செங்கோட்டையன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோரை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அவற்றிற்கும் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்திருந்தார். அடுத்த கட்ட நடவடிக்கை செங்கோட்டையன் என்ன மேற்கொள்கிறார் என்ற எவ்வித தகவலும் இல்லாத நிலையில் கோபிசெட்டிபாளையத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். ஆனால் இவற்றிற்கு எல்லாம் ஒற்றை வார்த்தையில் பதில் அளித்த செங்கோட்டையன் பொறுத்திருந்து பாருங்கள் என பல கேள்விகளுக்கும் பதில் அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், “அடுத்த கட்ட முடிவு எதுவும் எடுக்கவில்லை, ஆதரவாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுகிறார்கள், எல்லாவற்றிற்கும் விரைவில் நன்மை கிடைக்கும், எடப்பாடி பழனிசாமியிடம் ஒருங்கிணைப்புக்கான எந்த அறிகுறியும் இல்லாததை போல் என்னிடத்திலும் எந்த ரியாக்சனும் இருக்காது, இந்த அமைதி வெற்றிக்கான அறிகுறி, திட்டமிட்டபடி ஒருங்கிணைப்பு நடக்குமா? என எனக்கு தெரியாது” என்றார்..

கடந்த மாதம் கோபிசெட்டிபாளையம் வந்த எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க செல்லாதது குறித்து பதில் அளித்த அவர் அப்போது, தான் சென்னையில் இருந்ததாக கூறினார். எட்டாம் தேதி பிரச்சாரத்திற்கு வரும் எடப்பாடியை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு மறுபடியும் அவர் வருவது குறித்த தகவல் தனக்குத் தெரியாது என்றார். ஓபிஎஸ்-ஐ சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, பொறுத்திருந்து பாருங்கள் எனக் கூறிய செங்கோட்டையன் வழி தெரியாமல் செங்கோட்டையன் தவிக்கிறாரா என்ற கேள்விக்கு வழிகாட்டியாக எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கிறார்கள். அவர் வழியில் சென்று கொண்டிருக்கிறேன் என பதிலளித்தார். ஒருங்கிணைப்பு பணியை தொடர போவதாக எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக களம் இறங்கிய செங்கோட்டையன், தற்போது திட்டமிட்டபடி ஒருங்கிணைப்பு நடக்குமா என்ற கேள்விக்கு, அது தனக்குத் தெரியாது என பதிலளித்திருப்பது அவரது ஆதரவாளர்களை குழப்பம் அடைய வைத்துள்ளது.

