"திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை"- செல்லூர் ராஜூ பேட்டி

 
செல்லூர் செல்லூர்

திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை, மதுரை மக்கள் சொல்லக்கூடிய குறைகளை, கருத்துக்களை சட்டமன்றத்தில் பேசுகிறேன் என செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

தயாளு அம்மாள், கனிமொழிக்கு பதறாத திமுக, செந்தில் பாலாஜிக்கு பதறுவது ஏன்? - செல்லூர் ராஜூ கேள்வி..  

அதிமுகவின் 54 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜு கூறுகையில் "மதுரை மாநகராட்சியில் வரலாறு காணாத அளவிற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் வரி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளர்கள், முதலமைச்சர் உத்தரவின் பேரில் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழு தலைவர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். மண்டல தலைவர் ராஜினாமா விவகாரத்தை முடிக்க திமுக அரசு திட்டமிட்டது. ஆனால், அதிமுக அளித்த அழுத்தத்தின் காரணமாக மேயர் ராஜினாமா செய்துள்ளார். சொத்து வரி முறைகேட்டில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். வாரிசு அரசியல், ஊழலை ஒழிப்பதற்காக எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கினார்.

தவெக அரசியலில் இப்போது பாடம் படிக்கிறார்கள். அதனுடைய தலைவருக்கு நாங்களும் அறிவுரை சொன்னோம். தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ள இளைஞர்கள் அவர்களாகவே எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பங்கேற்கிறார்கள். மதுரை அழகுடன் காணப்படுகிறது என்றால் அதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காரணம். அதிமுக ஆட்சியில் மதுரைக்கான பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தியுள்ளனர். திமுக ஆட்சியில் உள்ள நான்கே முக்கால் வருடங்களில் எந்தவொரு திட்டங்களும் செயல்படுத்தவில்லை, மதுரையில் உள்ள 2 அமைச்சர்கள் எந்தவொரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை, திமுக ஆட்சியை குறை சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. மதுரை மக்கள் சொல்லக்கூடிய குறைகளை, கருத்துக்களை சட்டமன்றத்தில் பேசுகிறேன், அதிமுக கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரக்கூடிய சூழல் உள்ளது. தேர்தல் காலகட்டத்தில் தான் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்படும்" எனக் கூறினார்.