“பாமகவுக்கு எம்பி சீட் கொடுத்தோம் வெற்றி பெற்றவுடன் வேறு கூட்டணிக்கு சென்றுவிட்டனர்”- செல்லூர் ராஜூ

பாமகவுக்கு எம்பி சீட் கொடுத்தோம் வெற்றி பெற்றவுடன் வேறு கூட்டணிக்கு சென்றுவிட்டனர். ஆகவே கூட்டணிக்கட்சிகளை எவ்வாறு அரவணைப்பது என்று எடப்பாடிக்கு தெரியும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துவரிமான் கிராமத்தில் 6 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவில் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, “திமுக எத்தனை கட்சியோடு கூட்டணி வைத்தாலும் மக்கள் ஓட்டுப்போட தயாராக இல்லை.மக்கள் எப்போதும் அதிமுக - திமுக என்ற பெரும் கட்சிகளின் தலைமையை தான் விரும்புவார்கள்.முன்பு கலைஞரா? - ஜெயலலிதா என்று பார்த்தார்கள். இப்போது ஸ்டாலினா - எடப்படியா? என்று தான் பார்ப்பார்கள்.அரசு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஆசிரியர்கள் திமுகவுக்கு எதிராக உள்ளார்கள். 2026 தேர்தலில் திமுக குடும்பத்தை,மு.க.ஸ்டாலினை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. ஏனென்றால் திமுக குடும்பம் தான் எல்லாமே அனுபவிக்கிறது. திமுக குடும்பத்திலேயே "Power Politics" உள்ளது. திமுகவில் கனிமொழிக்கே முக்கியத்துவம் கிடையாது. நிகழ்ச்சிகளில் பூஜை போடும் போது மட்டும் அழைக்கிறார்களே தவிர கண்டுகொள்ளவில்லை.
எம்.ஜி.ஆரை போல எடப்பாடி பழனிசாமி எந்த வாக்குறுதி கொடுத்தாலும் நிறைவேற்றுவார். அதற்கு உதாரணம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதற்கு காரணம் எடப்படியார் தான். ஆனால் அன்புமணி ராமதாஸ் வெற்றி பெற்றவுடன் எங்களை மறந்துவிட்டு ஆளுங்கட்சிக்கு தாவிவிட்டர்,இருந்தாலும் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றினர்.எங்கள் தோழமை கட்சிகளை எப்படி அரவணைப்பது என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும். தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் உள்ளது. அப்போது அதிமுக ஆட்சி அமைப்பதற்கான கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் முடிவு எடுத்து அறிவிப்பார். கிராமத்துபாணியில் நாளைக்கு இறந்திடுவோம் என்று இன்றைக்கு சுடுகாட்டுக்கு சென்று படுக்கமுடியாது, காலம் உள்ளது.
மதுரை மேற்கு தொகுதியில் மூர்த்தி மட்டுமல்ல, பிரம்மா வந்தாலும் இது அதிமுக கோட்டை... சாட்டையை சுழற்றுவேன் சாட்டையை சுழற்றுவேன் என்று சொல்லிவிட்டு சர்வாதிகாரமாக முதலமைச்சர் நடந்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமி மிகவும் விவரமானவர். 2026 அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஊடகம், சினிமாதுறையினர் விவரமாக இருப்பார்கள். தென் மாவட்டத்தில் வரப்பிரசாதமாக உள்ள கலைஞர் நூலகத்தில் இப்போது யாரும் வருவதில்லை என்று கூறி சினிமா படம் திரையிட போவதாக சொல்கிறார்கள். கலைஞர் நூலகத்திற்கு "கலைஞர்" என்று பெயர் வைத்ததால் குளு குளுவென நூலகத்திற்கு வெயில் காலத்தில் கூட யாரும் வருவதில்லை. அமைச்சர் மூர்த்திக்காக பயந்து போவதற்கு நான் ஒன்றும் கோழை இல்லை.நான் மக்களை சந்திப்பவன் அல்ல. மக்களோடு மக்களாக இருப்பவன்.அமைச்சர் மூர்த்தியை அவரது கிழக்கு தொகுதியை தக்க வைக்க சொல்லுங்கள்.மதுரையில் உள்ள 10 தொகுதிகளில் அதிமுக தான் வெற்றி பெறும்” என்றார்.