“கே.பாலகிருஷ்ணனை சேகர் பாபு மிக கேவலமாக பேசியுள்ளார்”- செல்லூர் ராஜூ

 
செல்லூர்

மதுரை புதுவிளாங்குடி பகுதியில் தனது மகன் தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் இலவச கண் சிகிச்சை மற்றும் பொதுமருத்துவ சிகிச்சை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குடும்பத்துடன் கலந்துகொண்டார். 

செல்லூர் ராஜூ

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, “எனது மகன் தமிழ்மணி அறக்கட்டளை சார்பில் கண்சிகிச்சை மற்றும் இலவச மருத்துவ முகாம் நடத்த விளாங்குடி அரசுப்பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என முதன்மை கல்வி அலுவலரிடம் ஒரு வாரத்திற்கு முன்பு கேட்ட போது அனுமதி கொடுத்தார். ஆனால் திடீரென நேற்று காலை பள்ளியில் நடத்த அனுமதியில்லை என மாவட்ட கல்வி அலுவலர் சிவக்குமார் கூறினார். அரசியல் நிகழ்ச்சி நான் நடத்தவில்லை. பொதுமக்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் இலவச மருத்துவ முகாம் மட்டுமே என் சொந்த பணத்தை செலவு செய்து நடத்த இருந்தோம்.


மூன்றாண்டுகளுக்கு மேல் பள்ளியில் நிகழ்ச்சி நடத்தி இருக்கிறோம். ஆனால் கடைசிவரை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கவில்லை. நான் தொலைபேசியில் அழைத்தும் அலுவலர் சிவக்குமார் எடுக்கவில்லை. மாணவிக்கு ஆதரவாக பேசி அதிமுக போராட்டம் நடத்திய பிறகே தற்போது அனைத்து கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியிருந்த கோவிலில் தலைவர் நான் யார்? நான் யார்? என பாடியதுபோன்று தற்போது சார் யார்? சார் யார்? என பேசுகிறார்கள். தமிழக அரசு ஜனநாயகமுறைப்படி நடக்கிறதா, அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளதா என அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை கே.பாலகிருஷ்ணன் எழுப்பி இருந்தார். ஞானசேகரன் டைம் டேபிள் போட்டு குற்றச்சம்பவங்களை செய்துள்ளார். காவல்துறை சுதந்திரமாக விட்டுள்ளனர்.

புதிய தலைமுறை | கோப்புப்படம்


வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு கே.பாலகிருஷ்ணனை மிக கேவலமாக பேசி உள்ளார். இதுபோல் பேசினால் கம்யூனிஸ்ட் பெரிய பெட்டி வாங்கியதாக தான் மக்கள் நினைப்பார்கள். திமுக கம்யூனிஸ்ட்டை எந்த வகையில் வைத்திருக்கிறார்கள் என்பது சேகர்பாபு பேச்சு மூலம் தெரிகிறது. தனிப்பட்ட முறையில் கே.பாலகிருஷ்ணன் யாரிடமும் பணம் வாங்க மாட்டார். நேர்மையானவர். ஒரு நடிகையை ஆட்டு மந்தையில் அடைக்கிறார்கள். திமுகவில் இருந்த குஷ்பூவையே ஆட்டு மந்தையில் அடைத்துள்ளனர். விரைவில் 6 மாதம் சுற்றுபயணம் எடப்பாடி தொடங்க உள்ளார்.  மதுரையில் இருந்து தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்” என்றார்.