மது விற்பனையில் செந்தில் பாலாஜிக்கு 15 சதவீதம் கமிஷன்- செல்லூர் ராஜூ பேட்டி
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகளின் மக்களை சந்திப்பது ஓட்டை கப்பலில் பயணம் செய்வது போல இருக்கும் என மதுரையில் செல்லூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் செல்லூர் ராஜு உட்பட 500 க்கும் மேற்பட்டோர் கைது செய்து மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் கே.ராஜு, “மாணவிக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டு அதிமுகவினர் அகிம்சை வழியில் போராடினோம். ஆனால் காவல்துறை எங்களை குற்றவாளிகளை போல கைது செய்தது. அதிமுகவின் எழுச்சியை கட்டுப்படுத்தும் விதமாக திமுக அரசு மாணவிக்கு நீதி கேட்ட அதிமுகவினரை கைது செய்திருக்கிறது. திமுக அரசின் கைது நடவடிக்கைக்கு அதிமுக என்றும் பயப்படாது. தமிழக மக்களுக்கு உண்மையான விடியலை தருவதற்காக அதிமுக களப்பணிகளை செய்து வருகிறது. பல்கலைக்கழக மாணவிக்காக பாஜக தலைவர் அண்ணாமலை தன்னை தானே வருத்திக்கொண்டு போராடி உள்ளார். தன்னை வருத்திக் கொண்டு போராடிய அண்ணாமலையின் போராட்டம் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.
திமுக கூட்டணி கட்சிகள் அடிமைக்கும் அடிமையாக செயல்படுகிறது. மாணவிக்காக சிபிஎம் கட்சியின் அறிக்கை தவிர திமுக கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை, 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி கட்சிகள் மக்களை சந்திப்பது ஓட்டை கப்பலில் பயணம் செய்வது போல இருக்கும். தமிழகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மது விற்பனையில் 15 சதவீதம் கமிஷன் தொகை கொடுக்க வேண்டும் என எழுதப்படாத சட்டம் உள்ளது. ஒரு கோடி மது விற்பனைக்கு 15 இலட்ச ரூபாய் கமிஷன் தொகை தர வேண்டும். சிறைச்சாலை அதிமுகவினருக்காக கட்டப்பட்டது, நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை, அதிமுகவினர் சிறையிலிருந்து வெளியே வந்தால் திமுகவினர் சிறைக்கு செல்வார்கள்” என பேசினார்.