அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்த நடிகர் சூர்யா எங்கே சென்றார்?- செல்லூர் ராஜூ
மதுரையில் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்திய செல்லூர் ராஜு கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்டவை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் மதுரை செல்லூர் 60 அடி சாலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் 500 க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத நிலையில் தடையை மீறி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, “பெண்கள் கல்வி கற்க எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது, பெண்களுக்காக அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அனைத்து திமுக ஆட்சியில் மூடப்பட்டது. அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையாக செயல்பட்டது. துணை இராணுவத்தால் பிடிக்க முடியாத சந்தன கடத்தல் வீரப்பனை அதிமுக ஆட்சியில் காவல்துறை சூட்டு பிடித்தது. தற்போது தமிழகத்தின் ஆட்சி குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல ஆகியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை யாரும் குறை சொல்லாத அளவிற்கு நடத்தி காட்டியுள்ளார். எதிர்க்கட்சிகள் விரலை மூக்கில் வைக்கும் அளவிற்கு அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி காட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியில் 24,000 போராட்டங்கள் நடந்துள்ளன. அதிமுக ஆட்சியில் இருந்த சமூக ஆர்வலர்கள் இப்போது எங்கே போனார்கள்? அதிமுக ஆட்சியை விமர்சனம் செய்த நடிகர் சூர்யா எங்கே சென்றார்? திமுக ஆட்சிக்கு எப்போது வந்தாலும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது” என்றார்.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நடைபெற்றதை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்ட அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.