எங்கே போனது கமலின் நீதியும் மய்யமும்? செல்லூர் ராஜூ கிண்டல்

 
sellur raju

பாஜகவும், காங்கிரசும் அதிமுகவுக்கு நண்பர்கள் எப்போது வேண்டுமானாலும் யாரையும் கூட்டணியில் சேர்த்துக்கொள்வோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

காந்தியே அடித்திருப்பார்.. இ.பி.எஸ். பொறுமை காத்தார்..” - செல்லூர் ராஜு |  nakkheeran

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரையில் கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொண்டர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்று உள்ள தங்கம் தென்னரசு மிக சிறந்த நிர்வாகி. எந்த துறையிலும் அவர் முத்திரை பதிக்க கூடியவர். இன்றுள்ள அமைச்சர்களில், பிறரை தரக்குறைவாக பேசாதவர். நிதி துறையிலும் அவர் சிறப்பாக செயல்படுவார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். 


ஓ.பி.எஸ்., இல்லாமல் எடப்பாடியால் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது என வைத்திலிங்கம் கூறுகிறார். எதிர்முகாமில் உள்ளவர்கள் அப்படி தான் சொல்வார்கள். பொறுத்திருந்து பாருங்கள் எடப்பாடி தலைமையில் தான் ஆட்சி அமைப்போம். எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான். பாஜகவும், காங்கிரசும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்த விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என சொல்லும் போது, பல படங்கள் ஹிட் கொடுத்த விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம். மேலும் நடிகர் விஷால் கட்சி ஆரம்பித்தார், முதலமைச்சராகவேன் என்றார். தற்பொழுது எங்கே இருக்கிறார்? கட்சி நிலை என்ன என்பது கூட தெரியவில்லை?

கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லி தான் மக்கள் நீதி மய்யம் என கட்சி ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது? என தெரியவில்லை. எனவே, விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்” என்றார்.