“வாக்காளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் 100% பணப்பட்டுவாடா”- ஆர்.பி.உதயகுமார்

 
rb udhayakumar

வருகிற சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் தேவையான பணப்பட்டுவாடா 100% நடக்கும் என நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதயகுமார் சூசகமாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. குன்னத்தூரில் உள்ள மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா திருஉருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், இத்தொகுதியின் எம்எல்ஏவும், முன்னாள் அதிமுக அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் கட்சி நிர்வாகிகள் , பாக முகவர்கள் கூட்டத்தை நடத்தி பேசும் போது, வருகிற தேர்தலில் தேவையான தண்ணீரை திறந்து விடுவோம், அவ்வாறு வருகின்ற தண்ணீரை தேவையான இடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும்,அதற்கு வாய்க்கால் தூர்வாரி தயார் நிலையில் இருக்க வேண்டும் , இல்லை என்றால் தண்ணீர் வெளியே போய்விட்டது என்றால் வேளாண்மை வீணாகிவிடும், தண்ணீர் வீணாகிவிடும் , எல்லாமே வீணாகிவிடும்,நீங்கள் கேட்கலாம் போனமுறை தண்ணீரை திறந்து விடவில்லையே என, போன முறை வறட்சி ஏற்பட்டதால் திறந்து விட முடியவில்லை,இந்த முறை வறட்சி கிடையாது இந்த கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும், இன்னும் விவரமாக உங்களிடடம் பேச முடியாது, ஊடகங்களில் இந்த பேச்சு வெளியாகும். அப்போது எடப்பாடி பழனிச்சாமி என்னை கவனமாக பேச வேண்டாமா? என சாடுவார். அதனால் முழுமையாக என்னால் உங்களிடம் விவரிக்க முடியாது என பேசினார்.

மேலும் இந்த முறை விவசாயத்துக்கு தேவையான நூற்றுக்கு நூறு சதவீத தண்ணீரை திறந்து விட முடியும் என உறுதியாக பேசினார்.நிறைய தண்ணீர் திறந்து விட்டால் அழுகிப் போய்விடும், என்ன தேவையோ , அந்த தேவைக்காக மட்டுமே தண்ணீர் திறந்து விடுவோம்என வருகிற சட்டமன்றத் தேர்தலுக்கு பணப்பட்டுவாடா செய்வதை சூசகமாக கட்சி நிர்வாகிகள் , மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்களிடமும் எடுத்துரைத்தார்.