“தவெகவுடன் கூட்டணியா? வெளிப்படையாக பேச முடியாது”- ஆர்.பி.உதயகுமார் பேட்டி
தமிழக வெற்றிக்கழக கட்சியுடன் கூட்டணி என்பது வெளிப்படையாக கூற முடியாது, கூட்டணி என்பது நடக்கும் போது நடக்கும் என ஆர்.பி. உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி. குன்னத்தூரில் உள்ள மறைந்த எம்ஜிஆர், ஜெயலலிதா திருவுரு வெண்கலசிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (S. I. R ) குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் , அதிமுக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்கு பிறகு நிருபர்களை சந்தித்த ஆர்.பி உதயகுமார், “வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது குறித்து வாக்காளர்களுடைய விண்ணப்ப படிவத்தினை அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களை வைத்து வாக்காளர்களிடம் அளிக்க வேண்டும். போயஸ் கார்டனில் முக்கியமான ஆவணங்களை எரித்து அழித்ததாக டிடிவி தினகரன் கூறுகிறார். அது குறித்து இதுவரை எனக்கு தெரியாது , தெரிந்த பிறகு அது குறித்து பேசப்படும். தவெக கட்சி உடன் கூட்டணி என்பது வெளிப்படையாக வைத்து கூட்டணி பேசவா முடியும்? அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். மக்களுக்கு பயன் தரும் வகையில் நடக்கும். அடுத்தாண்டு ஜனவரியில் தேர்தல் கூட்டணி குறித்து கேளுங்கள்” என்றார்.

