“டாஸ்மாக்கில் தினமும் ரூ.10 கோடிக்கு மேல் ஊழல்... எங்களுக்கு திமுகவே எதிரி கட்சி”- ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளை கூட்டணியில் ஏற்றுக் கொள்வோம், திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே எங்களுக்கு ஒரே எதிரி கட்சி! அவர்களுக்கு எதிரியாக உள்ள அனைவரும் எங்களுக்கு எதிரிகள் அல்ல நண்பர்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. கட்சியின் ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.பி .உதயகுமார் கலந்துகொண்டு அதிமுகவிற்கு வாக்களிக்க கோரி அங்கு திரண்டிருந்த மக்கள் கடைகளில் குடி இருந்த மக்கள் தான் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி. உதயகுமார், “திராவிட முன்னேற்றக் கழக அரசு ஒவ்வொரு நாளும் பல்வேறு விழாக்களை நடத்துகிறார்கள். ஆட்சியின் அவலங்கள் வெளியே தெரியாதபடி அதனை மடைமாற்றும் முயற்சியாக விழாக்கள் நடைபெறுகிறது. அரசு விஞ்ஞானபூர்வமாக பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டு வருகிறது. டாஸ்மாக்கில் பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் பெற்று 10 கோடி ரூபாய் அளவிற்கு நாள் தோறும் ஊழல் நடைபெறுகிறது. இந்த பணம் அரசு கஜானாவிற்கு செல்லாமல் கட்சியின் தலைவர் குடும்பத்திற்கு செல்கிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் தியாகி என கூறி வந்தார். எவ்விதத்தில் அவர் தியாகி என்பது தற்போது தான் தெரியவந்துள்ளது. அரசிற்கு அரசு கஜானாவிற்கு செல்ல வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை மடை மாற்றி முதலமைச்சர் குடும்பத்திற்கு கிடைக்க வழிவகை செய்துள்ளதால் அவர் தியாகி என கூறுகிறார்.
தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியீட்டு வீடியோவில் உதயநிதியும், சபரீசனும் 30000 கோடி ரூபாய் பணத்தை வைத்து எங்கே மறைத்து வைப்பது என தெரியாமல் உள்ளனர் என்ற செய்தி இடம் பெற்றிருந்தது. இது தொடர்பாக முதலமைச்சர் உண்மைத் தன்மையை வெளியிடுவாரா? அல்லது அமைச்சர் தவறான தகவல் வெளியிட்டு இருந்தால் அவர் மீது வழக்கு தொடர்வாரா? 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே எங்களுக்கு ஒரே எதிரி கட்சி! திமுகவிற்கு எதிராக உள்ள அனைவரும் எங்களுக்கு நண்பர்களே... எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகள் அனைத்தையும் வரவேற்கிறோம்” என்றார்.