“அதிமுக- தவெக கூட்டணியா?- இந்த கண்டிஷனுக்கு ஒகேனா... சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயார்”

கூட்டணி பற்றி அதிமுக நிலைபாடு பற்றி எடப்பாடி பழனிசாமி பலமுறை தெளிவாக சொல்லி இருக்கிறார், அதில் மாற்றம் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பல்வேறு கோரிக்கைகளை கொண்ட மனுக்களை கொடுத்தார், அதில் "திருமங்கலம் - கொல்லம் நான்கு வழிச்சாலையில் ஆலம்பட்டி பாலத்தில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும், திருமங்கலத்தில் நகர் பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும், திருமங்கலம் புறவழிச்சாலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், திருமங்கலம் ரயில்வே மேம்பால பகுதிதில் தேவையான அணுகு சாலை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி.உதயகுமார், “பாதுகாப்பு இல்லாத தமிழ்நாட்டில் உண்மையான சுதந்திரம் இல்லை, 2-ஆவது சுதந்திரப் போராட்டத்தை தொடங்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம், அதிமுக கூட்டணி குறித்த முடிவெடுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது, திருப்பரங்குன்றம் மலை கோவில்கள் வழிபாடு குறித்த பிரச்சனையில் தமிழ்நாடு அரசு தலையிட வேண்டும், திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமர்ந்து பேசினால் பாஜக- அதிமுக கூட்டணி அமையும் என நயினார் நாகேந்திரன் கூறுகிறார். தொண்டர்கள் கருத்து சொல்லலாம், ஆனால் முடிவை எடப்பாடி பழனிசாமி எடுப்பார். அதிமுக நிலைபாடு என்ன என்பதை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஊடகம் முன்பாக பலமுறை தெளிவாக சொல்லி இருக்கிறார். அதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. பொதுசெயலாளர் எடப்பாடி எடுக்கும் முடிவு முடிவு இறுதியானது அதிகாரபூர்வமானது. மற்றவர்கள் கூறுவதை பார்க்கலாம், ரசிக்கலாம்” என்றார்.
தமிழக வெற்றிக் கழகம்- அதிமுக கூட்டணி குறித்த கேள்விக்கு அதிமுகவிற்கு ஆதரவளிக்கிற கட்சிகள் எந்த மூலையில் இருந்தாலும் அதற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக தயாராக உள்ளது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக யார் ஏற்றுக் கொள்கிறார்களோ! அவர்கள் எந்த மூலையில் இருந்தாலும் சிவப்பு கம்பளம் குறித்து வரவேற்கிறோம், தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி மக்களை சந்திக்க உள்ளார்" என கூறினார்.