"சுள்ளான்கள் எல்லாம் அடுத்த எம்ஜிஆருனு சொல்றாங்க".. விஜய்யை சாடிய ராஜேந்திர பாலாஜி
இன்றைக்கு வந்த சுள்ளான்கள் எல்லாம் அடுத்த எம்ஜிஆர் என்கின்றனர்! நடக்கின்ற போர் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான்... பாஜகவோ! காங்கிரஸோ!! களத்தில் இல்லை என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கலில் அதிமுக 53-ம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “கட்சியில் உழைப்பவர்களுக்கு தேடி தேடி பிடித்து பொறுப்பு தரும் இயக்கம் அண்ணா திமுக. தேடிப் பார்த்தாலும் திமுகவில்உழைப்பவர்களும் இல்லை. உழைப்பவர்களுக்கு மரியாதையும் கிடையாது. நான் படிக்கின்ற காலத்தில்அதிமுக தொடங்கப்பட்டபோது கட்சி அடிப்படை வேலையுடன் எம்ஜிஆர் படம் பார்த்து கொண்டாடுவது தான் எங்கள் வேலை. லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையிலும், ரத்தத்திலும் மலர்ந்த மலர்தான் அதிமுக இயக்கம். இன்றைக்கு அரசியலுக்கு வந்த சுள்ளான்கள் எல்லாம் அடுத்த எம்ஜிஆர் தான் தான் என்கின்றனர். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் நடக்கின்ற போர்வார் என்பது அதிமுகவுக்கும்- திமுகவுக்கும் தான். பாஜகவோ காங்கிரஸும் களத்தில் இல்லை. திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப அதிமுகவால் தான் முடியும். அதிமுக விருச்சிகமாக வளர தமிழக மக்கள் தான் காரணம் 53 வயது கொண்ட அதிமுக 31 வருடங்கள் நாடாண்ட கட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. திமுகவில் உழைப்பவனுக்கு மரியாதை இல்லை. ஏய்ப்பவனுக்குத்தான் மரியாதை. திமுகவின் பரம்பரை வாரிசு கலாச்சார சீரழிவு.
அதிமுகவில் உழைப்பின் மூலமாக படிப்படியாக பதவி கிடைக்கும். கட்சிக்கு விசுவாசியாக இருந்து உழைத்தால் அதிமுகவில் உயர்ந்த இடத்திற்கு வரலாம். திமுக ஆட்சியில் பட்டாசு தொழிலும், தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து உயர் நீதிமன்றமே கேள்வி எழுப்பி உள்ளது. அனைத்து தரப்பினர்களும் பாதிக்கபட்டுள்ள இந்த திமுக ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். மக்களுக்காக வேலை பார்க்கவும் தெரியவில்லை, வேலை செய்யவும் தெரியாத திமுக ஆட்சி என்பது ஜீரோ என்பதால் யாருக்கும் எந்தவிதமான லாபம் இல்லை. எனவே ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு அவர் நலமாக வாழட்டும். எடப்பாடி பழனிச்சாமியை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்புங்கள். அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
வேலை ஏதும் நடக்கவில்லை என்றால் டெல்லியில் இருந்து பணம் வரவில்லை என்கின்றனர். 40- எம்பிக்கள் யாரும் கேள்வி கேட்க மாட்டீர்களா? சென்னையில் கோஷம் போடாமல், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்பு கோஷம் போடுங்கள். திமுகவினர் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைக்கின்றனர். செவிட்டு ஆட்சியான திமுகவுக்கு காது கேட்கவில்லை. அதிமுக ஆட்சியில் வெள்ள பாதிப்பின் போது கடுமையாக வேலை பார்த்தோம். ஆனால் திமுகவில் யாரும் வேலை பார்க்கவில்லை. வெள்ளத்தில் தத்தளித்த சென்னை தப்பித்து விட்டது. திமுக ஆட்சி விரட்டி அடித்து விட்டு அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள். மனிதநேயத்துடன் ஏழை- எளிய மக்களுக்கு உதவும் கட்சி அதிமுக இயக்கம். கடந்த தேர்தலில் தமிழக மக்கள் தங்களது உரிமைச் சீட்டான வாக்குச்சீட்டால் தவறு செய்து விட்டனர். இனிவரும் காலத்தில் நித்திரை களைத்து இரட்டை இலை சின்னத்தில் முத்தரையிடுங்கள். 2026 -ம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைய 8- கோடி தமிழக மக்களும் முடிவு எடுத்து விட்டனர்” என்றார்.