"விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் 220 தொகுதிகளில் வெற்றி பெறும்... இல்லையெனில்"- ராஜேந்திர பாலாஜி
சிவகாசியில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி, “டெல்டா மாவட்டங்களில் முறையாக நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் நெல் வீணாகி இருக்காது. ரத்தத்தை சிந்தி நெல் விளைவித்த விவசாயிகளை நிலை குறித்து கவலை கொள்ளாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் திரைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறார். விவசாயிகளின் அழுகுரல் முதல்வருக்கு கேட்கவில்லை. எடப்பாடி பழனிச்சாமி விவசாயி என்பதால் விவசாயிகளின் கஷ்டத்தை அறிந்து அவர்களுக்கு துணையாக நிற்கிறார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அவரது கோரிக்கையை உள்வாங்கி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் கடமையை செய்ய தவறிய முதலமைச்சர் எடப்பாடியார் மீது குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. டாஸ்மாக் தமிழகத்திற்கு சாபக்கேடு, டாஸ்மாக்கை நிறுத்த முடியாது. ஆனால் அதை உயர்த்தி பிடிக்கவோ, உற்சாகப்படுத்தவோ கூடாது, டாஸ்மாக் விற்பனையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளக்கூடாது. பாட்டாளி மக்கள் கட்சியினர் நெசவாளர்களின் வளர்ச்சிக்கு புதிய சட்டங்களை தீட்டி இருந்தால் நாங்கள் வரவேற்றிருப்போம். திமுகவிற்கு தோல்வி பயம் வந்து விட்டதால், தோல்விக்கான காரணமாக sir சட்டத்தை கூறி வருகிறார்கள்.
விஜய் கரூருக்கு செல்ல அனுமதி கொடுக்காத நிலையில் மீறி கரூருக்கு சென்றால் வேறு யார் மூலமாக அசம்பாவிதம் ஏற்பட்டால் மீண்டும் கெட்ட பெயர் ஏற்படும் என்ற நோக்கில் மாமல்லபுரத்திற்கு பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சந்திக்க உள்ளார். விஜய் ஒரு ஸ்டார் நடிகர், அவருக்கென ஒரு மாஸ் இருப்பதை மறுக்க முடியாது. அவரது நடவடிக்கைகள் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கிறது. அதெல்லாம் ஓட்டாக மாற வேண்டும் என்றால் பயிற்சியுள்ள பயிற்சியாளர்கள் தேவை. அந்த பயிற்சியாளர்களாக அதிமுகவி நிர்வாகிகள் இருப்பார்கள். விஜய் அதிமுக கூட்டணிக்கு வந்தால் அவருக்கு நல்லது . வரவில்லை என்றாலும் அதிமுகவிற்கு எந்த கெடுதலும் கிடையாது. விஜய் கூட்டணிக்கு வரவில்லை என்றால் அதிமுக கூட்டணிக்கு ஓட்டு சதவீதம் குறையும், ஆனால் வெற்றியின் விளிம்பிலிருந்து அதிமுக இறங்கி வராது. விஜய் கூட்டணிக்கு வந்தால் 220 தொகுதிகளில் வெற்றி பெறும், விஜய் வரவில்லை என்றால் 180 இடத்தில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும். விஜய் அதிமுக கூட்டணிக்கு வருவார். விஜய் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வந்தால் அவரது எதிர்காலத்திற்கு நல்லது. விஜய் கூட்டணிக்கு வருவதும் தனித்துப் போட்டியிடுவதும் அவரது முடிவு, ஆனால் அதிமுக, பாஜக விஜய் அனைவரும் கூட்டணியில் இணைய வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு விஜய் வருவது என்பது அவருக்கு மிகப்பெரிய பாதுகாப்பாகவும், அவரது எதிர்கால அரசியலுக்கு பாதுகாப்பாக அமையும். விஜயை நான் அழைக்கவில்லை, வந்தால் வரவேற்போம்” என்றார்.


