"விஜயகாந்த் உயிரோடு இருக்கும் வரை திமுகவை எதிர்த்தவர்! அதிமுக உடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும்"- ராஜேந்திர பாலாஜி

 
ராஜேந்திர பாலாஜி பேட்டி ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர் அருகே புல்லாலக்கோட்டையில் தேவாலயத்தில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்ட அ.இ.அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறித்துவர்களிடம் வரும் சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவிற்கு ஆதரவு திரட்டினார்.

ராஜேந்திர பாலாஜி

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜேந்திர பாலாஜி, “அ.இ.அ.தி.மு.க.-பாஜக கூட்டணியில் பாமக அன்புமணி தரப்பு இணைந்துள்ளது.தேர்தலில் வெற்றி பெறும் அளவிற்கு கூட்டணி அமைந்துள்ளது. அதற்கான பணியை எடப்பாடி பழனிச்சாமி சிறப்பாக செய்து வருகிறார். கூட்டணி வாசல் திறந்துள்ளது. புத்தாண்டு முதல் எடப்பாடியார் சாதுரியமாக அற்புதங்களை நடத்தி வருகிறார். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுகவில் இருக்கின்ற யாரும் எடப்பாடி பழனிச்சாமியை விட்டு செல்ல மாட்டார்கள். தேமுதிக அதிமுக பக்கம் தான் வரும். விஜயகாந்த் உயிரோடு இருக்கும் வரை திமுகவை எதிர்த்தவர்.அந்த எண்ணத்தில் தான் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தார். மறைந்த கேப்டன் விஜயகாந்த் கொள்கைக்கு எதிராக பிரேமலதா விஜயகாந்த் செல்ல மாட்டார். அதிமுக உடன்தான் தேமுதிக கூட்டணி அமைக்கும். 

கரூர் சம்பவத்தின் போது நடிகர் விஜய் அங்கு இருந்திருக்கிறார். இதனால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு இருக்கிறார். இது பழிவாங்கும் நோக்கில் அவரை அழைக்கப்படவில்லை.அப்படி அழைத்தால் அதனை தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். திமுகவும் காங்கிரசுக்கும் கருத்து வேறுபாடு இல்லை. கருத்து மோதலே இருக்கிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று விருதுநகர் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பகிரங்கமாக குரல் கொடுத்துள்ளார். மாணிக்கத் தாகூர் கருத்தை காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை அவரது சொந்த கருத்து என்று சொல்லியுள்ளார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் அனுமதி பெற்று தான் சொன்னதாக மாணிக்கம் தாகூர் சொல்கிறார். திமுகவுக்கும் காங்கிரசுக்கும் இன்னும் பலமான கருத்து மோதல் ஏற்படும். திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குள் பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. 

தமிழகத்தில் என்.டி.ஏ கூட்டணி ஆட்சி அமையும் என்று தான் அமித்ஷா தெரிவித்தார். தமிழகத்தில் தனிக்கட்சி பெரும்பான்மை உடன் அதிமுக ஆட்சி அமைக்கும். தமிழக மக்கள் அதைத்தான் விரும்புவார்கள்.எடப்பாடி தலைமையிலான கூட்டணி தனி பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சி அமைக்கும். அதற்கான நடவடிக்கையில் எங்கள் பொது செயலாளர் எடப்பாடி இறங்குவார். சிக்கல் இல்லாத சிரமம் இல்லாத பெருவாரியான ஆதரவை அதிமுகவுக்கு மக்கள் அளிப்பார்கள். எடப்பாடியார் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார்” என்றார்.