”ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா மக்களுக்கு தெரிந்தால் சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்கும்”

 
annamalai

‘ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது கர்நாடகா மாநிலத்தில் தெரிந்தால், சட்டமன்ற தேர்தலில் பாஜக தோற்கும்’ என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

புகழேந்தி


ஓசூரில் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, “விரைவில் கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது . இதுபோன்ற அண்ணாமலையின் விமர்சனங்களால் கர்நாடக மாநில தமிழர்கள் மனம் புண்பட்டு பிஜேபிக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து தோல்வியை தழுவும் நிலைமைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். 

வாஜ்பாய், அத்வானி உள்ளிட்ட மாபெரும் தலைவர்களுடன் ஜெயலலிதா நட்பு ரீதியாக பழகுவதோடு மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகவும் மேம்பட்டு கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் அதிமுகவினரின் ஆதரவால் பிஜேபி வெற்றி பெற்ற வரலாறு உள்ளது என்பது அண்ணாமலைக்கெல்லாம் தெரியாது. மேலும் சந்தன கடத்தல் மன்னன் வீரப்பனை பிடிப்பதற்காக அந்த மாநில காவல் துறைக்கு எண்ணற்ற உதவிகளை செய்து அவர்களின் நன்றிக்கு பாத்திரமாக ஜெயலலிதா விளங்கி வருகிறார். 

சந்தன கடத்தல் வீரப்பன் விவகாரத்தில் கர்நாடக மாநில போலிஸ் உயர் அதிகாரி கோபால் ஹோசூர் என்பவருக்கு கழுத்துப் பகுதியில் 3 துப்பாக்கி குண்டுகள் துளைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பொழுது உயரிய சிகிச்சை அளித்து அவரை காப்பாற்றியவர் ஜெயலலிதா. இது போன்ற எண்ணற்ற நிகழ்வுகள் அண்ணாமலைக்கு தெரியாது. எடப்பாடி தலைமையிலான அதிமுக தொடர்ந்து தேர்தல்களில் தோல்விகளை சந்தித்து வருவதற்கு காரணம் அவர்களது நடவடிக்கைகளும் மக்களின் எதிர்ப்பும்தான். மேலும் இது போன்ற தோல்விகளை பற்றி கூற வேண்டுமானால் திரைப்பட பாடல் வரிகளான ஊர்வசி டேக் இட் ஈசி பாலிசி என்பது நினைவுக்கு வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தல் தோல்வியையும் ஈசியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது இதிலிருந்து தெரிய வருகிறது” என விமர்சித்தார்.