"எடப்பாடி பேசும் முத்தான, சத்தான பேச்சுகள் டிவியில் வரவிடாமல் இருட்டடிப்பு"- பொன்னையன்
எடப்பாடி தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணிஅமைந்து அதிமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் அதிமுக முன்னால் சட்டமன்ற உறுப்பினர் குப்பன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, பொன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்று தொண்டர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்
நிகழ்ச்சியில் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன், “எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்களை தொலைக்காட்சிகளில் இருட்டடிப்பு செய்கின்றனர். ஆல் இந்தியா அளவில் தொலைக்காட்சிகளை அடக்குகிறார்கள். எடப்பாடி பேசுகின்ற முத்தான பேச்சு சத்தான பேச்சு தமிழ்நாட்டை வளர்க்கக்கூடிய பேச்சுகள் எந்த தொலைக்காட்சியிலும் வருவதில்லை. தினமலர் பிஜேபிக்கு சொந்தம் ஆகிவிட்டது, தினமலர் உரிமையாளர் ஆர்எஸ்எஸ், அதனால் செய்தியை போடுவதில்லை. தொலைக்காட்சி, பத்திரிகைகள் ஒரு பக்கம், சோசியல் மீடியா கூட இருட்டடிப்பு செய்கின்றன.
எடப்பாடி புரட்சித்தலைவரை போல் அமைதியாக இருப்பார், ஆனால் ஜெயலலிதாவைப் போல் சாட்டை எடுத்து விரட்டி விரட்டி அடக்கி வைப்பார். வீரநடை தொடங்கிவிட்டது, 2026ல் கட்டாயமாக தமிழகத்தை ஆளப் போகின்ற கட்சி அதிமுக தான். தொண்டர்களை நம்புகிறார் எடப்பாடி. தொண்டரை நம்பியதால் ஜெயலலிதா வெற்றி பெற்றார். எடப்பாடி தலைமையில் மிகப்பெரிய மெகா கூட்டணி அமைந்து தமிழகத்தில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். அப்படி மெகா கூட்டணி அமைந்தாலும் அமையாவிட்டாலும், தனி ஆட்சியை எடப்பாடி தமிழகத்தில் உருவாக்குவார்” என்றார்.