“உதய சூரியன் கடலில் மூழ்கி கொண்டிருக்கிறது; திமுக மண்ணை கவ்வும்”- பொன்னையன்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டுச்சாலையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் 71-வது பிறந்த நாளையொட்டி ரத்ததானம், மருத்துவ முகாம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன், மாநிலங்கவை தேர்தலில் கூட்டணி கட்சிக்கு இடம் ஒதுக்கீடு செய்வது குறித்த செய்தியாளர் கேள்விக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலளிப்பார் என மழுப்பலாக கூறினார். கூட்டணி உறுதி செய்யும் அதிகாரம் ஈபிஎஸ்ற்கு உள்ளதால், இது போன்ற கேள்வியை எடப்பாடியிடம் கேளுங்கள் என பதிலளிக்காமல் நழுவினார்.
தொடர்ந்து தமிழக இளைஞர்கள் எடப்பாடி பக்கம் உள்ளனர் எனவும், தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரசும் தான் எனவும், பொய்யை மட்டுமே பேசி மாணவர்களை ஏமாற்றும் ஸ்டாலினுக்கு 2026-இல் மக்கள் பாடம் புகுட்டுவர் எனவும் கூறினார். பாராளுமன்றமே பாராட்டும் அளவுக்கு ஆட்சி நடத்தியவர் எடப்பாடி எனக் கூறிய அவர், அமலாக்கத்துறை பிடியில் சிக்கியதாலேயே 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத ஸ்டாலின், இப்போது டெல்லி சென்றார் எனவும், திமுகவும், உதய சூரியனும் கடலில் மூழ்கி கொண்டிருக்கிறது எனவும், 2026-இல் திமுக மண்ணை கவ்வும் எனவும் தெரிவித்தார்


