ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொடுப்பதாக ரூ.30 லட்சம் மோசடி- அதிமுக நிர்வாகி கைது

 
ரூ.2,000 நோட்டுகளை மாற்றிக்கொடுப்பதாக ரூ.30 லட்சம் மோசடி- அதிமுக நிர்வாகி கைது

2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற 10% கமிஷன் தருவதாக கூறி ரூ.30 லட்சம்  மோசடியில் ஈடுபட்ட அ.தி.மு.க.வை சேர்ந்த திருப்பூர் வடக்கு ஒன்றிய பாசறை செயலாளர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து உள்ள பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (32). கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர், தன்னிடம் 30 லட்சம் ரூபாய்க்கு 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளதாகவும், அதற்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வேண்டும் என்றும், 10 சதவீதம் கமிஷன் தருவதாகவும் கூறி திருப்பூர் பொங்குபாளையம் காளம்பாளையம் பகுதியை சேர்ந்த பைனான்சியர் சபரிநாதன்(30) என்பவரிடம் கேட்டுள்ளார்.   

இதை நம்பி கமிஷனுக்கு ஆசைப்பட்ட சபரிநாதன், நேற்று 500 ரூபாய் நோட்டுகளாக 30 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, ஜெயராமன் சொன்னபடி, பெருமாநல்லூரில் உள்ள அதிமுகவை சேர்ந்த திருப்பூர் வடக்கு ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர் வீட்டுக்கு முன்பாக சென்றுள்ளார். அங்கு வந்த சபரிநாதனிடம், ஜெயராமன், கொங்கு நாடு ஜனநாயக கழகத்தின் மாநில பொருளாளரான திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்த சிவராமன் (36) மற்றும் சந்திரசேகர் ஆகியோர் 30 லட்சம் ரூபாய்க்கான 500 ரூபாய் நோட்டுக்களை வாங்கிக் கொண்டு, சந்திரசேகர் வீட்டுக்குள் சென்று வேறு வழியாக ஜெயராமன மற்றும் சிவராமன் ஆகிய இருவரும் காரில் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளனர்.  

இதையடுத்து, அவர்கள் வெகுநேரமாகியும் வெளியே வராததால் தான் ஏமாற்றப்பட்டதைறப்பட்டதை உணர்ந்த சபரிநாதன், ஜெயராமன் உட்பட மூன்று பேரும் சேர்ந்து ரூ. 30 லட்சம் பெற்றுக்கொண்டு தன்னை மோசடி செய்ததாக கூறி பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பெருமாநல்லூர் காவல் ஆய்வாளர் ஹேமலதா, மோசடி செய்து காரில் தப்பியோடி தலைமறைவான ஜெயராமன் மற்றும் சிவராமன் ஆகியோரை மதுரை அருகே வைத்தும் சந்திரசேகரை அவரது வீட்டிலேயே வைத்தும், என மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ. 17 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், தப்பியோட பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை ஊத்துக்குளி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.