"பொங்கல் தொகுப்பு பொருட்களில் இந்தி" - இந்தியை வரவேற்க திமுக முடிவு எடுத்துவிட்டதா?

 
ops mk stalin

பொங்கல் தொகுப்பு வழங்கியதில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

ops

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கல்லில் இந்தியில் எழுதினால் இந்தி திணிப்பு என்று கூறும் திமுக,  தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தின் மூலம் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான பொருட்களை பிற மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்வதும்,  அந்த பொருட்களின் பெயர்கள் இந்தியில் எழுதப்பட்டு இருப்பதும் எந்த வகையில் நியாயம் ? இந்தி திணிப்பை அரசே மேற்கொள்ளலாமா அல்லது இந்தியை வரவேற்க திமுக முடிவு எடுத்துவிட்டதா? தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்க தமிழ்நாட்டில் நிறுவனங்களே இல்லையா? இது தமிழ் மொழியையும் , தமிழர்களையும் அவமதிக்கும் செயல் இல்லையா? எந்த அடிப்படையில் பிற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்டது? தமிழ் நாட்டு நிறுவனங்கள் லாபம் அடையக் கூடாதா? பொருட்களுடன் ஏன் துணிப்பையை வழங்கப்படவில்லை? இவற்றிற்கான பணம் கொடுக்கப்பட்டு விட்டது என்றால் எவ்வளவு கொடுக்கப்பட்டது?  மீதி எவ்வளவு கொடுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்.

pongal

இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடந்துள்ளதாகவும்,  சமூக வலைத்தளங்களில் செய்திகள் வருகின்றன.  இந்த திட்டத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இல்லை என்பதுதான் எதார்த்தம். இதைவிட ரொக்கமாக ஆயிரம் ரூபாய் கொடுக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என்று மக்கள் கூற ஆரம்பித்து விட்டார்கள். இந்த திட்டத்தினால் தமிழ்நாடு மக்களுக்கு எந்தவித பலனுமில்லை. பயனாளிகள் யார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம் .மொத்தத்தில் இந்த திட்டம் படுதோல்வி அடைந்து இருக்கிறது, என்பதுதான் உண்மை. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் வேட்டி, சேலை எல்லோருக்கும் கிடைப்பதில்லை என்ற புகாரும் ஆங்காங்கே எழுந்துள்ளது.

ops

இதையெல்லாம் நான் சுட்டிக் காட்டுவதற்கு காரணம் மக்கள் படும் அவதி ,மக்களிடையே காணப்படும் குறைகள், மக்களிடையே நிலவும் அதிருப்தி  ஆகியவற்றை தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு வர வேண்டிய கடமை, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. மக்களின் மேற்படி புகார்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக முதலமைச்சருக்கு உண்டு, எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு இந்த திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும், குளறுபடிகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இதுபோன்ற தவறுகள் இனிவரும் காலங்களில் நிகழா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.