“தனிக்கட்சி தொடங்கமாட்டேன்... அரசியலை விட்டே விலகுகிறேன்” - ஓ.பன்னீர்செல்வம்

 
“தனிக்கட்சி தொடங்கமாட்டேன்... அரசியலை விட்டே விலகுகிறேன்” -  ஓ.பன்னீர்செல்வம்  

அதிமுகவின் உரிமையை மீட்டெடுக்கதான் நான் கழகம் ஒன்றை தோற்றுவித்து இருக்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தேனியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “அதிமுகவின் உரிமையை மீட்டெடுக்கதான் நான் கழகம் ஒன்றை தோற்றுவித்து இருக்கிறேன். நான் உறுப்பினர்களையே அதில் சேர்க்கவில்லை. நான் நடத்திவரும் கழகத்தின் கூட்டத்தில் ‘எந்த நிலையிலும் தனிக்கட்சி தொடங்கமாட்டேன்’ என பல முறை அறிவித்து இருக்கிறேன். முதலமைச்சராக நான் பொறுப்பு வகித்தபோது ஜெயலலிதா வழியில் சிறப்பாக பணியாற்றினேன். பிரிந்து கிடந்த அதிமுகவை இணைத்தவர் ஜெயலலிதா. 2016 தேர்தலில் அதிமுகவிற்கு அமோக வெற்றி தேடி தந்தார் ஜெயலலிதா. கட்சிக்கு சோதனை வந்தபோது முதலமைச்சர் பதவியை ஜெயலலிதா என்னிடம் கொடுத்தவர். ஜெயலலிதா மறைந்தபின்பு என்னை அதிமுகவினர் கட்டாயப்படுத்தியதால் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்ந்தேன். முதலமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவிற்கு எந்த துரோகமும் செய்யாமல் மகன் போல் இருந்தேன். அவர் தந்த முதலமைச்சர் பணியை நிறைவாக முடித்த நிம்மதி, மகிழ்ச்சி எனக்கு இருக்கிறது. தமிழக மக்களுக்காக தன்னையே அர்ப்பணித்த தன்னலம் பாராத, உன்னத தலைவி ஜெயலலிதா. அவரின் புகழ் பூமி உள்ளவரை நிலைத்து இருக்கும். 


டிடிவி தினகரன் மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன். அவர் பேசுவதை போல என்னாலும் பேச முடியும். ஆனால் நாகரீகம் கருதி அவர் பற்றி நான் பேசவில்லை. திமுக கூட்டணி பலமாக இருக்கிறது. அதனால் அவர்கள்தான் ஜெயிப்பாங்க என அமித்ஷா என்னிடம் கூறினார். என் உழைப்பை யாரும் இம்மியளவு கூட குற்றம் சொல்ல முடியாது. அதிமுகவுக்காக எவ்வளவோ பொறுத்திருக்கிறேன். இந்த பன்னீர்செல்வம் என்ன தவறு செய்தேன் என்று சொல்லுங்கள், நான் அரசியலை விட்டே விலகுகிறேன்” என்றார்.