“விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை”- ஓபிஎஸ்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணா மேம்பாலம் கீழே உள்ள பெரியாரின் திருவுருவச்சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பெரியாரின் திருவுருப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சரும், தொண்டர் உரிமை மீட்பு குழுவின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், “திராவிட இயக்கத்தின் தலை காவேரியாக உள்ள பெரியார் அவர்கள் அனைத்து மக்களும் சம நீதியோடு வாழ வேண்டும் எனவும் சமூக நீதிக்கு இலக்கணம் வகுத்தும் தந்தவர் பெரியார் பிறந்த தினம் இன்று அவரின் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்.
ஏற்றத்தாழ்வற்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும். திராவிட இயக்கத்தின் பெரியாரின் புகழ் உலகம் இருக்கும் வரை நிலைத்து நிற்கும். நீங்கள் ஆவலோடு கேட்கும் கேள்விகள் எனது இதயத்தில் இருந்து மூளைக்கு சென்று கொண்டு உள்ளது. அனைத்திற்கும் பதில் அதிமுக உரிமைகளை தொண்டர்களின் உரிமைகளை பாதுகாக்கின்ற இயக்கமாக நாங்கள் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய இயக்கத்தின் தலைமை கழக நிர்வாகிகள் உயர்மட்ட குழு நிர்வாகிகளின் கூட்டத்தை கூட்டி தேர்தல் நிலைப்பாடு, அடுத்த கட்ட திட்டம், கூட்டணி குறித்து ஆலோசிக்க இருக்கிறோம். விரைவில் தொண்டர்களின் கருத்துகளை கேட்டறிந்து உங்களுக்கு சொல்கிறேன்.
எம்ஜிஆர் எந்த நோக்கத்திற்காக உருவாக்கினாரோ அந்த இயக்கத்தை அம்மா அவர்கள் மக்கள் இயக்கமாக மாற்றி தமிழகத்தில் 50 ஆண்டு கால வரலாற்றில் 30 ஆண்டு காலம் மாபெரும் தலைவர்கள் பெற்று தந்த இயக்கத்தை அந்த எண்ணத்தின் அடிப்படையில் எனக்கும் செயல்பாடு கடமை பொறுப்பு இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவை காப்பாற்றியது பாஜக தான் என எடப்பாடி கூறியதற்கு பாஜக அல்ல, கூவத்தூரில் கூடியிருந்த எம்.எல்.ஏக்கள்தான் என நல்ல பதிலை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் என பதில் அளித்தார். இணைப்பு குறித்து உங்களின் அனைத்து கேள்விக்கும் உரிய நேரத்தில் நான் உங்களுக்கு தெரிவிப்பேன்” என தெரிவித்தார்.

