டெல்லி சென்ற ஈபிஎஸ்- ஜெயலலிதா பாணியை கையிலெடுத்த ஓபிஎஸ்

 
ops

டெல்லிக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்க உள்ள நிலையில், கோவில் கோவிலாக சென்று ஓபிஎஸ் வழிபாடு மேற்கொண்டுவருகிறார்.

Image

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோவிலில் முன்னாள் முதல்வர் சட்டமன்ற உறுப்பினர்  ஓ. பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வமான வடிவுடையம்மன் கோவிலில் ஓ.பன்னீர்செல்வம் இன்று வழிபாடு மேற்கொண்டார். ஜெயலலிதாவுக்கு சிக்கல் வரும் நேரம் எல்லாம் வடிவுடை அம்மன் கோவிலுக்கு மறக்காமல் தரிசனம் செய்து வந்த நிலையில் அதே பாணியில் ஓபிஎஸ் வழிபாடு செய்தார்

முன்னதாக காலை முதலே  திருவேற்காடு  பாடி உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வந்த ஓபிஎஸ் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார். அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர். இதனை அடுத்து விநாயகர் ஆதிபுரீஸ்வரர் வடிவுடையம்மன் சன்னதிகளுக்கு சென்று தனது குடும்ப பெயர்களை பட்டியலாக பேப்பரில் எழுதி வைத்து குருக்கள் இடம் கொடுத்து அர்ச்சனை செய்தார். குடும்பத்தினர் பெயர், ராசி, நட்சத்திரம் பேப்பரில் எழுதி வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டார். பின்னர் கோவிலுக்கு உள்ளே இருக்கும் பக்தர்களுக்கு வணக்கம் தெரிவித்து கோவிலை சுற்றி வந்த ஓபிஎஸ், கொளுத்தும் வெயிலில் சுட்டெரிக்கும் மணலில் வெறும் காலுடன் நடக்க முடியாமல்  வேகமாக வெளியே சென்றார்.

Image


செய்தியாளர்கள் பன்னீர்செல்வத்தை மடக்கிய பொழுது, ஒன்லி ஆன்மீகம் மட்டும் தான் இன்று அரசியலுக்கு லீவு.... வெயில் வெயில் அதிகமாக இருக்கிறது. வந்து ரொம்ப நாளாச்சு என கோவிலுக்கு வந்தேன்  என்று நடந்து கொண்டே பட்டும் படாமலும் பேசி செய்தியாளர் சந்திப்பை தவிர்த்து நழுவி சென்றார். எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ள நிலையில் அங்கு அமித்ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இன்று கோவில் கோவிலாக  வழிபாடு செய்து வருவது பரபரப்பை  ஏற்படுத்தி உள்ளது.